சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய பொள்ளாச்சி கொமதேக எம்எல்ஏ நித்தியானந்தன், ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இதன் மூலம் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பொள்ளாச்சியை மாவட்டமாக உருவாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். பொள்ளாச்சி, ஆணைமலை, வால்பாறை, கிணத்துக்கடவு வட்டங்களை இணைத்து புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டால், அப்பகுதி மக்கள் மருத்துவம் உள்ளிட்ட தேவைகளுக்காக நீண்ட தூரம் பயணம் செய்வதை தவிர்க்க முடியும் என அவர் கூறினார்.
பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனத் திட்டம் கொங்கு மண்டலத்தின் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கு முக்கியமானதாக இருப்பதாகவும், ஆணைமலையாறு-நல்லாறு திட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் பல பகுதிகளின் நீர்த்தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்றும் நித்தியானந்தன் தெரிவித்தார்.
இதனுடன், பணம் செலுத்தி காத்திருக்கும் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்க வேண்டும் என்றும், கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர் சட்டசபையில் கோரிக்கை விடுத்தார்.




