Oplus_131072
*வயலில் பாம்புகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் செடிகளும் மூலிகைகளும்*
விவசாயிகளின் நண்பன் எனப்படும் பாம்புகள், தற்போது சரியான புரிதல் இல்லாததால் விவசாயிகளின் எதிரியாகவே பார்க்கப்படுகிறது. வயலின் ஊடே செல்லும் பாம்புகளை அடிக்கும் பழக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. பாம்புகள் மனிதர்களால் கொல்லப்படாமல் இருக்கவும், விவசாயிகள் பாம்புகளால் கடிக்கப்படாமல் இருக்கவும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ளலாம். பாம்புகளை குறித்த அடிப்படை அறிவு, களைக்கட்டுப்பாடு, பாம்புகள் விரும்பாத தாவரங்களை வளர்த்தல் மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை கடைபிடிப்பதன் மூலம் பாம்புகளால் எழும் பிரச்சினைகளை தடுக்கமுடியும். கிராமங்களில் வீடுகளில் பாம்புகள் நுழைந்துவிடாமல் இருக்க பாட்டிமார்கள் வாசலில் உப்பை தூவிவிடுவார்கள், இதனால் பாம்புகள் நடமாட்டம் குறையும் என்பது நம்பிக்கை.
ஒரு சில தாவரங்களை வயல்களில் நடவு செய்தன் பாம்புகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி, பாம்புகள் நம் வயலில் இனப்பெருக்கம் செய்வதையும் கட்டுப்படுத்தலாம். பல ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வுகளில் சில தவாரங்கள் பாம்புகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துக்கின்றன என்பதை கண்டறிந்துள்ளார்கள். உதாரணமாக இந்திய சுந்தரவனக் காடுகளில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், *துளசிச் செடிகள் (Ocimum tenuiflorum)* நாகப்பாம்பு உட்பட பல பாம்புகளை விரட்டுவதில் முக்கியப் பங்களிக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் *புதினா (Mint – Mentha spp)* செடிகளின் எண்ணெய் நறுமணம் பாம்புகளை விரட்டுவதாக தரவுகள் உள்ளன. *லாவெண்டர் (Lavandula angustifolia)* செடிகளும் பாம்புகளை விரட்டும், ஏனெனில் அதன் நெடியுடன் கூடிய லாவெண்டர் நறுமணத்திற்கு பாம்புகள் வருவதில்லை. *எலுமிச்சை புல் (Lemon grass)* ரகங்கள் வெளியிடும் வலுவான எலுமிச்சை வாசனை பாம்புகளை விரட்டுவதில்ம நன்கு செயல்புரிகிறது.
*பூண்டு (Allium sativum)* ஒரு இயற்கையான பாம்பு விரட்டி. பூண்டில் உள்ள சல்போனிக் அமிலம் பாம்புகளை விரட்டுகிறது. தோட்டத்தில் வாய்ப்புள்ள இடங்களில் பூண்டு நடவு செய்யலாம். பூண்டு நட வாய்ப்பு இல்லாதவர்கள் பாம்புகள் நடமாட்டம் உள்ள பகுதியில் நறுக்கிய பூண்டை உப்புநீரில் கலந்து ஊறவைத்து தெளித்து விடலாம்.
*சின்ன வெங்காயம் (Allium cepa)*, பூண்டு மற்றும் வெங்காயம் வளர்ப்பதை விட சின்ன வெங்காயம் வளர்ப்பது எளிது என்பதால் தோட்டத்தில் சின்ன வெங்காயம் வளர்ப்பது நல்லது. மேலும் வெங்காயத்தை வேகவைத்து அந்த சாற்றை வயல்களில் விடுதன் மூலம் பாம்பு நடமாட்டம் பெருமளவு கட்டுப்படுகிறது. மேலும் அழகுக்காக வளர்க்கப்படும் *Tulbaghia violacea பூண்டு* என்ற பூண்டு மனம் உடைய செடிகளையும் வளர்க்கலாம்.
*பாம்பு கற்றாழை (Sansevieria trifasciata)* எனப்படும் ஒரு வகைக் கற்றாழைச் செடிகளை பாம்புகளை கட்டுப்படும் நடவு செய்யலாம். பொதுவாக உயிர்வேலியாக பயன்படுகிறது, காற்றை சுத்தப்படுத்த கூடியது. இலை சதைப்பற்றானது, அவற்றின் கூர்மையான இலைகள் மற்றும் கசப்பான சுவை பாம்புகளுக்கு எதிராக இருக்கின்றன. எனவே இந்த செடிகளைத்தாண்டி பாம்புகள் வருவதில்லை.
*ரோஸ்மேரி (Salvia rosmarinus)* வலுவான நறுமணம் கொண்டுள்ளதால் இயற்கையான பாம்பு விரட்டியாக செயல்படுகிறது. இனிய நறுமணத்திற்காக மாலையில் கட்டப்படும் *மாசிப்பச்சை (Artemisia wallichiana)* என்றும் தாவரமும் சிறந்த பாம்பு விரட்டியாகும். இந்த தாவரங்களை வயல் வரப்போரங்கள் மற்றும் நடைபாதைகள் மேலும் பாம்பின் வழிப்பாதைகளில் நடுவதால் பாம்பின் தொல்லை பெருமளவு கட்டுப்படும்.
*முக்கியக் குறிப்பு*: மேற்கண்ட தாவரங்கள் பாம்புகளின் நடமாட்டத்தை ஓரளவு கட்டுப்படுத்தும், எனினும் இந்த தாவரங்கள் பாம்புகளை நிச்சயமாக தடுக்கும் என்பது உறுதியில்லை. பாம்புகள் சில நேரங்களில் அந்த தாவரங்களின் வழியிலேயே கடந்து செல்லலாம். ஒவ்வொரு பாம்பு இனத்தின் தனிப்பட்ட தன்மை, அந்த பாம்பு இருக்கும் அப்போதைய நிலை, சுற்றுச்சூழல் மற்றும் அதன் பசி, தாகம் போன்ற உடல்தேவைகளினால் பாம்புகள் சூழ்நிலைக்கேற்ப வெவ்வேறு விதமாக செயல்பட வாய்ப்புள்ளது. இதனால், பாம்புகளை கட்டுப்படுத்தவும் நம்மை பாதுகாத்துக்கொள்ளவும் வேறுசில முன்னேற்பாடுகள் செய்துகொள்வதும் அவசியமாகும்.
*களை பராமரிப்பு*: நிலத்தை ஓரளவு சுத்தமாக வைக்க வேண்டும். பாம்புகள் வயலிலேயே தங்கி இனப்பெருக்கம் செய்யும் வகையில் வயல்களை பராமரிப்பில்லாமல் விடக்கூடாது, அதாவது நமது வயலை பாம்புகள் கடந்து செல்ல அனுமதிக்க வேண்டும், ஆனால் நமது வயலிலேயே தங்கிவிட அனுமதிக்கக்கூடாது.
*பாதுகாப்பு கருவிகள்*: வயல்வெளிகளில் மாலைவேளைகளில் மற்றும் செல்லும்போது *டார்ச்* பயன்படுத்துவது அவசியம். முக்கியமாக பாம்புகள் இனப்பெருக்க காலமான மே, ஜூன், ஜூலை மாதங்களில் பாம்புகள் நடமாட்டம் அதிகம் இருப்பதால் இரவு நேரங்களில் அதிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பண்ணையில் தவிர்க்க முடியாத காரணங்களால் அதிக களைகள் இருந்தால் களைகளின் இடையே நடந்துசெல்லும்போது நீளமாக *மூங்கில்குச்சி* பயன்படுத்தி களைகளை விலக்கிவிட்டு செல்லவேண்டும். இதனால் பாம்புகள் இருந்தாலும் நம் பாதையைவிட்டு விலகிச்செல்லும்.
*பாம்பு ரகங்களை அறிதல்*: தற்போது தமிழ்நாட்டில் உள்ள பாம்புகளில் 4 பாம்புகள் மட்டுமே உயிரைக்கொல்லும் விஷம் உடையவை. *நாகம், கட்டுவிரியன், கண்ணாடி விரியன், சுருட்டை விரியன்*. இந்த நான்கு பாம்புகளையும் சரியான அடையாளம் தெரிந்திருக்க வேண்டும். எனவே பாம்புகளை அடையாளம் காணும் கலையை விவசாயிகள் தெரிந்திருக்க வேண்டும். உதாரணமாக படம் எடுக்காத நாகப்பாம்பு பார்க்க சாரைப்பாம்புபோல் இருக்கும். கவனமாக பார்த்தால் தான் அது நாகம் என்பது தெரியும். அவ்வாறே கட்டுவிரியின் மற்றும் வெள்ளிக்கோல் வரையன் பாம்புகள் ஒரே மாதிரி இருக்கும், வெள்ளிக்கோல் வரையன் விஷமற்றது.
பாம்புக் கடியில் இருந்து தப்பிக்க எது நஞ்சுள்ள பாம்பு எது நஞ்சற்ற பாம்பு என்ற புரிதல் விவசாயிகளுக்கு அவசியம். இத தெரிந்திருந்தால் எல்லா பாம்புகளையும் அடிக்க வேண்டியதில்லை, ஏதாவது ஒரு பாம்பு கடித்துவிட்டால் விஷப்பாம்போ என்ற அச்சப்படத் தேவையில்லை.
*உடனடி மருத்துவம்*: மேற்கண்ட நான்கு பாம்புகளில் எந்த பாம்பு கடித்தாலும் சரியான நேரத்தில் அரசு மருத்துவமனை சென்று ஆண்டி வீனம் ஊசியை போட்டுக்கொள்வதால் பாம்புகளின் நச்சை முறிக்கலாம். எனவே அருகில் உள்ள ஆன்டி வீனம் இருப்பில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவனை முகவரிகளை அறிந்திருக்க வேண்டும். பாம்புகளிடம் இருந்து நாம் பாதுகாப்பாக இருப்போம், பாம்புகளையும் அழிவில் இருந்து காப்போம்.




