விட்டுச்சென்றவர்களுக்கும்
விலகி நடந்தவர்களுக்கும்
என் நன்றிகள்
உடனிருந்து
தலை தடவிய
உங்கள் அன்பு
கற்றுத்தராத
ஒரு வாழ்வினை
உங்களால்
கிடைத்த சில அவமானங்கள் கற்றுத்தந்திருக்கின்றன
உங்களால்
உடைந்த சில நம்பிக்கைகள்
கற்றுத்தந்திருக்கின்றன
உங்களால்
சிந்திய சில கண்ணீர்த்துளிகள் கற்றுத்தந்திருக்கின்றன
விட்டுச்சென்றவர்களுக்கும்
விலகி நடந்தவர்களுக்கும்
என் நன்றிகள்
உங்களால்தான்
என் முட்டாள்த்தனங்களை நான் அறிந்துகொண்டேன்
உங்களால்தான்
என் பலவீனங்களை நான் களைந்திடத் துணிந்தேன்
உங்களால்தான்
என் குற்றவுணர்வுகளிலிருந்து
நான் மீண்டு வந்தேன்
ஆக
விட்டுச்சென்றவர்களுக்கும்
விலகி நடந்தவர்களுக்கும்
என் மனமார்ந்த
நன்றிகள்
நீங்களே
இந்த அறிவிலிக்கு
வாழ்வைக் கற்றுத்தந்த
மாபெரும்
ஆசான்கள்..




