ஆன்லைன் மோசடி மூலம் திரட்டப்பட்ட பணத்தைப் பெறுவதற்காக தனது வங்கிக் கணக்கை வாடகைக்கு விட்டு உடந்தையாகச் செயல்பட்டதாக, நெல்லை மத்திய மாவட்ட தவெக துணைச் செயலாளராக இருந்த விக்னேஷை சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரது வங்கிக் கணக்கில் குறுகிய காலத்திலேயே ரூ.18 கோடி பணம் வரவு வைக்கப்பட்டு, பின்னர் பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு பரிவர்த்தனை செய்யப்பட்டிருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, விக்னேஷ் மீது சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக தகவல் வெளியான நிலையில், விக்னேஷை தவெக கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர். அவரது வங்கிக் கணக்கில் நடைபெற்ற பணப் பரிவர்த்தனைகள் மற்றும் மோசடி பணத்துடன் அவருக்கு இருந்த தொடர்பு குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




