முன்னாள் தேசிய கால்பந்து வீரரும், கோவை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரியுமான 41 வயதான அசீம் கொராலியாடன், புதன்கிழமை இரவு ஏற்பட்ட சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். சிங்காநல்லூரில் உள்ள வீட்டில் இருந்து பணிக்குச் சென்றுகொண்டிருந்தபோது, சித்ரா விமான நிலையம் அருகே பின்னால் வந்த லாரி அவரது வாகனம் மீது மோதியதாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த அசீம் கொராலியாடன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவு குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் விளையாட்டு வட்டாரத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கால்பந்தில் சிறந்து விளங்கிய அசீம், கேரளாவின் 21 வயதுக்குட்பட்டோர் அணியில் இடம்பெற்றிருந்தார். மேலும், சந்தோஷ் கோப்பை தொடரில் மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு அணிகளுக்காகவும் விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.



