அரிய வகையைச் சேர்ந்த லார் கிப்பான் குரங்கு விற்பனை தொடர்பாக வனத்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், நடிகர் விக்ரமுக்கும் இந்த விவகாரத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என வனத்துறை அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
இந்த குரங்கை வைத்திருந்த கேசவநாதன் என்பவரிடம் அதற்கான உரிய ஆவணங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், அந்த குரங்கை விதிமுறைப்படி பதிவு செய்யாமல் வைத்திருந்ததாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, குரங்கை முறையாகப் பதிவு செய்யாதது தொடர்பாக கேசவநாதன் மீது வனத்துறையினர் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த விவகாரத்தில் நடிகர் விக்ரமின் பெயர் தொடர்புபடுத்தப்பட்ட நிலையில், விசாரணையின் அடிப்படையில் அவருக்கும் சம்பவத்திற்கும் தொடர்பு இல்லை என்பதை வனத்துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.




