திருமண நாளில் மாயமான மணப்பெண்.. மாப்பிள்ளைக்கு அனுப்பிய அதிர்ச்சி மெசேஜ்!

 

ஆந்திரப் பிரதேசத்தின் கடப்பா மாவட்டம் புலிவெந்துலாவில், திருமணம் நடைபெற இருந்த நாளில் மணப்பெண் திடீரென மண்டபத்திற்கு வராமல் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமண ஏற்பாடுகளுக்காக மாப்பிள்ளை குடும்பத்தினர் லட்சக்கணக்கில் செலவு செய்திருந்த நிலையில், கடைசி நேரத்தில் வந்த ஒரு குறுஞ்செய்தி அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

காதல் திருமணத்திற்கு ஏற்பாடு

புலிவெந்துலாவில் கால்நடை பராமரிப்புத் துறையில் பணியாற்றி வரும் பெண் ஒருவர், வேம்பள்ளி மண்டலத்தைச் சேர்ந்த பிரசாத் என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்ததைத் தொடர்ந்து, பிரசாத்தின் குடும்பத்தினர் திருமண ஏற்பாடுகளை தொடங்கியுள்ளனர்.

திருமணத்திற்காக பந்தல் அமைத்ததுடன், உறவினர்கள் மற்றும் ஊர் மக்களுக்கு விருந்து ஏற்பாடு செய்துள்ளனர். மேலும், மணமக்கள் மற்றும் உறவினர்களுக்காக சுமார் ரூ.1.5 லட்சம் மதிப்பிலான துணிகளும் வாங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக சுமார் ரூ.10 லட்சம் வரை செலவு செய்ததாக பிரசாத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

முகூர்த்த நேரத்தில் காணாமல் போன மணப்பெண்

திருமண நாள் வந்ததும் மண்டபத்தில் மணமகன் மற்றும் உறவினர்கள் தயாராக இருந்துள்ளனர். ஆனால், முகூர்த்த நேரம் நெருங்கியும் மணப்பெண் மட்டும் மண்டபத்திற்கு வரவில்லை.

இதனால் பதற்றமடைந்த குடும்பத்தினர் அவரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றுள்ளனர். அப்போது மணப்பெண், “உன்னைத் திருமணம் செய்து கொண்டால் என் அம்மா இறந்துவிடுவார், சாரி” என்று குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் அவரது செல்போன் அணைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலீசில் புகார்

திருமணம் நடைபெறாததால் அதிர்ச்சியடைந்த பிரசாத், திருமண ஏற்பாடுகளுக்காக சுமார் ரூ.10 லட்சம் செலவு செய்ததாகக் கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

மேலும், விசாரணையில் அந்தப் பெண் இதற்கு முன்பும் இதேபோன்று இரண்டு திருமணங்களில் தொடர்பு கொண்டு, பணம் பெற்றதாக தகவல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்தச் சம்பவம் திட்டமிட்ட திருமண மோசடியா அல்லது வேறு காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பெண்ணின் முந்தைய திருமணங்கள், பணப் பரிவர்த்தனைகள் மற்றும் அவர் திடீரென மாயமானதற்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து தகவல்களை சேகரித்து வருகின்றனர்.

Read Previous

ரயிலுக்கு வெளியே தொங்கிய சூட்கேஸ்.. நடைமேடையில் உடைந்து சிதறிய உடைமைகள்!

Read Next

மனைவியின் காதலுக்காக கணவனே செய்த வினோத முடிவு.. அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular