திங்கள், அக்டோபர் 26, 2026
உண்மையின் குரல்
அரசியல்

சென்னையில் முடங்கிக் கிடக்கும் அம்மா குடிநீர் நிலையங்கள்: தவெக அரசுக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

சென்னையில் முடங்கிக் கிடக்கும் அம்மா குடிநீர் நிலையங்கள்: தவெக அரசுக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் அம்மா குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்படாமல் முடங்கிக் கிடப்பதாக வெளியான செய்திகளைக் குறிப்பிட்டு, அவற்றை உடனடியாகச் சீரமைத்து மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட அம்மா குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் நாள்தோறும் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இலவசமாக வழங்கப்பட்டு வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்நிலையங்கள் செயல்படாமல் இருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையங்கள் முடங்கியிருப்பதால், ஏழை, எளிய மக்கள் தங்களின் அன்றாடக் குடிநீர்த் தேவைக்காகத் தனியார் நிறுவனங்களிடம் ஒரு கேன் தண்ணீருக்கு ரூ.40 வரை செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அடிப்படைத் தேவையான குடிநீரைக்கூட விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழல் உருவாகியிருப்பது நியாயமா என்றும் அரசுக்குக் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏற்கெனவே அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் மக்கள் சிரமங்களைச் சந்தித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ள தினகரன், அமுதம் பல்பொருள் அங்காடிகளில் கிலோ ரூ.30-க்கு சன்னரக அரிசி வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் விமர்சித்துள்ளார். ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும் அரிசியைப் பாலிஷ் செய்து விற்பனை செய்வதாக எழுந்துள்ள புகார்கள் குறித்தும் அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதிலும், பொருளாதாரச் சுமையைக் குறைப்பதிலும் தவெக அரசு போதிய கவனம் செலுத்தவில்லை எனக் குற்றம்சாட்டிய அவர், இலவசக் குடிநீர் வழங்கும் நிலையங்கள் முடங்கியிருப்பது தனியார் நிறுவனங்களிடம் மக்கள் அதிக விலை கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலையை ஏற்படுத்துவதாகக் கூறியுள்ளார்.

எனவே, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் செயல்படாமல் உள்ள அம்மா குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை உடனடியாக ஆய்வு செய்து, தேவையான சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும், ஏழை, எளிய மக்களுக்கு முன்பு போலவே சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசை டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.