ஞாயிறு, நவம்பர் 22, 2026
உண்மையின் குரல்
உலகம்

குழந்தை உயிர் பிழைத்தால் தவழ்ந்து செல்வதாக வேண்டுதல் 19 நாட்கள் போராட்டத்துக்குப் பின் தாயின் நெகிழ்ச்சி செயல்!

குழந்தை உயிர் பிழைத்தால் தவழ்ந்து செல்வதாக வேண்டுதல் 19 நாட்கள் போராட்டத்துக்குப் பின் தாயின் நெகிழ்ச்சி செயல்!

பிரேசில் நாட்டில், உயிருக்கு ஆபத்தான நிலையில் பிறந்த தனது குழந்தை குணமடைந்தால் மருத்துவமனையிலிருந்து முழங்காலில் தவழ்ந்து வெளியே வருவதாக வேண்டிக்கொண்ட தாய், மகன் நலம்பெற்று வீடு திரும்பியதும் தனது வேண்டுதலை நிறைவேற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

பிரேசிலின் மேசியோ நகரில் உள்ள மெட்டர்னிடேட் எஸ்கோலா சாண்டா மோனிகா மருத்துவமனையில் 24 வயதான கிரிஸ்லீன் கோம்ஸ் என்பவருக்கு ஆண்ட்ரிக் டக்ளஸ் என்ற ஆண் குழந்தை பிறந்தது. பிறந்த குழந்தைக்கு மெக்கோனியம் ஆஸ்பிரேஷன் சிண்ட்ரோம் என்ற தீவிர சுவாச பாதிப்பு ஏற்பட்டதால், மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

 

குழந்தையின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததால், தாய் கிரிஸ்லீன் கோமஸ் தொடர்ந்து மனவேதனையுடன் இருந்தார். அந்த இக்கட்டான சூழலில், தனது மகன் உயிர் பிழைத்து ஆரோக்கியமாக வீடு திரும்பினால், அவனை கையில் ஏந்தியபடி மருத்துவமனையிலிருந்து முழங்காலில் தவழ்ந்து வெளியே வருவதாக வேண்டுதல் வைத்தார். குழந்தை உயிர் பிழைக்க வேண்டும் என்பதே அந்த தாயின் ஒரே எதிர்பார்ப்பாக இருந்தது.

 

தொடர்ந்து 19 நாட்கள் தீவிர சிகிச்சை பெற்ற ஆண்ட்ரிக், இறுதியில் உடல்நலம் தேறி ஏப்ரல் 16ஆம் தேதி மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து தனது வேண்டுதலை நிறைவேற்றிய கிரிஸ்லீன், குழந்தையை கையில் ஏந்தியபடி மருத்துவமனை வழியாக முழங்காலில் தவழ்ந்து வெளியே வந்தார். இதைக் கண்ட மருத்துவப் பணியாளர்களும் நெகிழ்ச்சியடைந்தனர். தங்களது குழந்தை உயிருடன் மீண்டு வந்த மகிழ்ச்சியில் அந்த குடும்பம் வீடு திரும்பிய தருணம், நம்பிக்கையையும் தாயின் அன்பையும் வெளிப்படுத்தும் நிகழ்வாக அமைந்தது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.