சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் குழந்தைகள்; நினைவாற்றல் மற்றும் கல்வித்திறன் பாதிக்கப்படும் என ஆய்வில் எச்சரிக்கை!

தற்போதைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் பயன்பாடு பெரியவர்களிடம் மட்டுமின்றி சிறு குழந்தைகளிடமும் அதிகரித்து வருகிறது. இரண்டு வயது குழந்தைகள் கூட செல்போனை எளிதாகப் பயன்படுத்தும் அளவிற்கு தொழில்நுட்பத்தின் தாக்கம் வளர்ந்துள்ளது. குறிப்பாக, குழந்தைகள் உணவு சாப்பிட மறுக்கும்போது அவர்களின் கைகளில் செல்போனை கொடுத்து வீடியோ பார்க்கச் செய்து உணவு கொடுக்கும் பழக்கம் பல பெற்றோர்களிடையே காணப்படுகிறது.
இவ்வாறு சிறு வயதிலேயே செல்போன் பயன்படுத்தத் தொடங்கும் குழந்தைகளுக்கு நாளடைவில் அதன் மீதான ஆர்வம் அதிகரித்து, செல்போன் இல்லாமல் இருக்க முடியாத நிலை உருவாகலாம். மேலும், பள்ளிக்குச் செல்லும் வயதில் உள்ள சிறுவர்களும் சிறுமிகளும் தங்களுக்கென தனியாக செல்போன் வேண்டும் என்று பெற்றோரிடம் அடம்பிடிக்கும் பழக்கமும் அதிகரித்து வருகிறது.
இந்தச் சூழலில், சிங்கப்பூர் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், மிக இளம் வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் குழந்தைகளின் வளர்ச்சி தொடர்பான முக்கியமான தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, அதிக நேரம் திரையைப் பார்ப்பது குழந்தைகளின் நினைவாற்றல், கற்றல் திறன் மற்றும் கல்விச் செயல்பாடுகளைப் பாதிக்கக்கூடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, நீண்ட நேரம் செல்போன் பயன்படுத்துவது குழந்தைகளின் மொழித் திறன் வளர்ச்சியிலும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. எனவே, குழந்தைகளுக்கு சிறு வயது முதலே செல்போன் பயன்படுத்தும் பழக்கத்தை ஏற்படுத்துவதைத் தவிர்த்து, அவர்களின் வயதுக்கு ஏற்ற விளையாட்டுகள், புத்தக வாசிப்பு மற்றும் நேரடி உரையாடல்களுக்கு பெற்றோர்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.




கருத்துகள் (0)