மழைக்காலத்தில் பொருட்களை பாதுகாக்க சில எளிய வழிமுறைகள்!

மழைக்காலத்தில் வீட்டில் உள்ள மின்னணு சாதனங்கள் முதல் ஆடைகள், காலணிகள் மற்றும் சமையலறைப் பொருட்கள் வரை பலவற்றையும் கூடுதல் கவனத்துடன் பாதுகாக்க வேண்டியது அவசியம். மழையால் ஏற்படும் ஈரப்பதம் மற்றும் தண்ணீர் கசிவு காரணமாக விலையுயர்ந்த பொருட்கள் சேதமடைய வாய்ப்புள்ளது. இதனைத் தவிர்க்க சில எளிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றலாம்.
லேப்டாப், செல்போன் போன்ற மின்னணு சாதனங்களை வெளியே எடுத்துச் செல்லும்போது வாட்டர் ப்ரூப் வசதியுள்ள பைகளில் வைத்துப் பாதுகாப்பது நல்லது. முக்கியமான சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்கள் தண்ணீரில் நனைந்து சேதமடையாமல் இருக்க ஜிப்-லாக் பைகளைப் பயன்படுத்தலாம்.
அதேபோல், மழைக்காலத்தில் துணிகளில் ஈரப்பதம் காரணமாக பூஞ்சை மற்றும் துர்நாற்றம் ஏற்படக்கூடும். இதைத் தவிர்க்க துணிகளை நன்றாக உலர்த்தி அலமாரியில் வைக்க வேண்டும். அலமாரிக்குள் கற்பூரம் அல்லது வேப்பிலையை வைப்பது பாரம்பரியமாகப் பயன்படுத்தப்படும் ஒரு முறையாகும். காலணிகளைப் பொறுத்தவரை, மழைநீரில் எளிதில் சேதமடையக்கூடிய லெதர் காலணிகளுக்குப் பதிலாக ரப்பர் காலணிகளைப் பயன்படுத்தலாம்.
சமையலறையில் வைக்கப்படும் அரிசி, பருப்பு, மாவு உள்ளிட்ட மளிகைப் பொருட்களும் மழைக்கால ஈரப்பதத்தால் பாதிக்கப்படலாம். அவை கட்டிப்படுவதையும் பூச்சிகள் வருவதையும் தவிர்க்க, நன்றாக உலர்ந்த காற்றுப்புகாத டப்பாக்களில் சேமித்து வைப்பது சிறந்தது. மேலும், மளிகைப் பொருட்களில் வண்டுகள் வராமல் தடுக்க பிரிஞ்சி இலை அல்லது கிராம்பைச் சேர்த்து வைக்கலாம். இத்தகைய சிறிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மழைக்காலத்தில் வீட்டுப் பொருட்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும்.




கருத்துகள் (0)