தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை நீடிக்கும் – சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!

வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல சுழற்சி காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கான சூழல் நீடிக்கும் என்றும், சில மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்றும் முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, நவம்பர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மூன்று மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதே நாட்களில் காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தொடர்ந்து மழை பெய்யக்கூடிய சூழல் நிலவுவதால் பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசுவதற்கான வாய்ப்பும் இருப்பதால் கடலுக்குச் செல்லும் மீனவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் தமிழக மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. மழை மற்றும் கடல் சீற்றம் தொடர்பான எச்சரிக்கைகளை மீனவர்கள் தொடர்ந்து கவனித்து, பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




கருத்துகள் (0)