ஆத்தூர் அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: ஆசிரியர் போக்சோவில் கைது!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், 10ஆம் வகுப்பு மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு அளித்ததாக எழுந்த புகாரில் 49 வயதான ஆசிரியர் சங்கர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அந்தப் பள்ளியில் கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாகப் பணியாற்றி வரும் அவர், கடந்த ஒரு மாதமாக 8-க்கும் மேற்பட்ட மாணவிகளிடம் வகுப்பறையில் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசியதுடன், பாலியல் சீண்டலிலும் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
ஆசிரியரின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட இரண்டு மாணவிகள், இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியரிடம் முதலில் புகார் தெரிவித்துள்ளனர். தலைமை ஆசிரியர் நடத்திய விசாரணையின்போது, ஆசிரியர் சங்கர் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே மாணவிகள் தங்களுக்கு நேர்ந்தவற்றைப் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பெற்றோர்கள் மீண்டும் பள்ளித் தலைமை ஆசிரியரைச் சந்தித்து புகார் அளித்தனர்.
இந்த விவகாரத்தின் தீவிரத்தைத் தொடர்ந்து, தலைமை ஆசிரியர் சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எல்லப்பனுக்குத் தகவல் அளித்தார். இதன் அடிப்படையில் குழந்தைகள் நலக்குழு அதிகாரிகள் பள்ளிக்குச் சென்று ஆசிரியர் சங்கர் மற்றும் புகார் அளித்த மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டது உறுதியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பள்ளித் தலைமை ஆசிரியர் அளித்த புகாரின் பேரில், ஆத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் ஆசிரியர் சங்கர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். அரசுப் பள்ளியில் மாணவிகளுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய ஆசிரியர் மீதே இத்தகைய புகார் எழுந்து அவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் கவனத்தைப் பெற்றுள்ளது.




கருத்துகள் (0)