தவெக ஆட்சியை கவிழ்க்க 25 எம்.எல்.ஏ.க்கள் குறி?.. திமுகவின் ‘ஆபரேஷன்’ குறித்து பரபரப்பு தகவல்!

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்து 6 மாதங்கள் நிறைவடைய உள்ள நிலையில், ஆளும் கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சியான திமுக தரப்பில் அரசியல் காய்நகர்த்தல்கள் நடைபெற்று வருவதாக தனியார் இதழில் வெளியாகியுள்ள தகவல் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வரும் நவம்பர் 13-ஆம் தேதிக்குப் பிறகு சட்டப்பேரவையில் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது தொடர்பாக திமுக திட்டமிட்டு வருவதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஆளும் கட்சியைச் சேர்ந்த சுமார் 25 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை தங்கள் பக்கம் திருப்பும் முயற்சி நடைபெற்று வருவதாகவும், அரசுக்கு எதிராக அவர்கள் வாக்களிக்கும் வகையில் அரசியல் ரீதியாக அணுகப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
போதிய தனிப்பெரும்பான்மை இல்லாத சூழலில் தவெக ஆட்சி நடைபெற்று வருவதாகக் கூறப்படும் நிலையில், இதனை அரசியல் ரீதியாகப் பயன்படுத்தி ஆட்சிக்கு நெருக்கடி ஏற்படுத்த எதிர்க்கட்சியினர் முயற்சி செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், 25 எம்.எல்.ஏ.க்களை திருப்பும் முயற்சி அல்லது நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான இந்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ள அரசியல் தகவல்கள் மற்றும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலானவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரம் குறித்து திமுக மற்றும் தவெக தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக என்ன பதில் வருகிறது என்பதே அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளில் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.




கருத்துகள் (0)