வியாழன், அக்டோபர் 29, 2026
உண்மையின் குரல்
அரசியல்

“அமைச்சருக்கு நோபல் பரிசே கொடுக்கலாம்!” – ராஜீவுக்கு செல்லூர் ராஜூ நக்கல்..

“அமைச்சருக்கு நோபல் பரிசே கொடுக்கலாம்!” – ராஜீவுக்கு செல்லூர் ராஜூ நக்கல்..

 

 

திருப்பூர் மாவட்டம் நொய்யல் ஆற்றில் அளவுக்கு அதிகமாக பொங்கி வரும் நுரைக்கு ரசாயனக் கழிவுகள் காரணமில்லை என்றும், பொதுமக்கள் பயன்படுத்தும் சோப்பு மற்றும் ஷாம்புதான் காரணம் என்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் ராஜீவ் விளக்கம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

 

இந்த விளக்கம் குறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, இத்தகைய புதிய கண்டுபிடிப்பை வெளியிட்ட அமைச்சருக்கு நோபல் பரிசே வழங்கலாம் என கலகலப்பாக நக்கலடித்தார்.

 

தான் அமைச்சராக இருந்தபோது ஈஜிப்ட் மற்றும் தெர்மாகோல் விவகாரங்களில் தம்மைக் கலாய்த்த நெட்டிசன்கள், தற்போது இந்த அமைச்சரின் பேச்சைப் பார்த்து ஏன் அமைதியாக இருக்கிறார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

 

“நடிகர்கள் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்!”

 

தொடர்ந்து நடிகர்களின் அரசியல் வருகை குறித்தும் கருத்து தெரிவித்த செல்லூர் ராஜூ, தற்போது மக்கள் மத்தியில் நடிகர்களின் அரசியல் வருகை அதிகமாகத் தெரிந்தாலும், அவர்களில் யாரும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் கால் தூசிக்குக் கூட ஈடாக முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

 

மேலும், தனுஷ், சிவகார்த்திகேயன் என யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்றும், ஆனால் மற்ற நடிகர்களின் அரசியல் வருகையால் தங்களது தலைவரின் அரசியல் அடையாளம் பாதிக்கப்படுமோ என்ற அச்சம் விஜய் கட்சியின் தொண்டர்களிடம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

“கைது நடவடிக்கைகள் ஒரு நாடகம்!”

 

கடந்த ஆறு மாத காலத்தில் இந்த ஆட்சியின் மீது பல்வேறு கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளதாகவும், அவற்றை மக்கள் மத்தியில் இருந்து திசைதிருப்புவதற்காகவே “அவரைக் கைது செய்கிறோம், இவரைக் கைது செய்கிறோம்” என்ற நாடகத்தை அரசு அரங்கேற்றி வருவதாகவும் செல்லூர் ராஜூ குற்றம்சாட்டினார்.

 

தன் மீதான தவறுகளையும் தோல்விகளையும் மறைப்பதற்காகவே தற்போதைய அரசு இத்தகைய அடக்குமுறைகளை கையாள்வதாகவும் அவர் சாடினார்.

 

செல்லூர் ராஜூவின் இந்தப் பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

 

 

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.