
Oplus_131072
படித்து சிந்திக்க..
பாட்டி தன் பேரன் பேத்திகளுக்கு நல்லவன், புத்திசாலி இந்த இரண்டில் எப்படி இருக்க வேண்டும்? என்பதற்காக இந்த கதையை சொன்னார் ”
ஒரு காட்டில் ஆடு ஒன்றுக்கு இரண்டு குட்டிகள் இருந்தன. குட்டிகளும் வளர்ந்து சுயமாக வாழ எதிரிகளிடம் அகப்பட்டுக் கொள்ளாமல் வாழ்க்கையை நன்றாக அனுபவிக்கச் சொல்லித் தாய் ஆடு அனுப்பி வைத்தது. இரண்டும் தனித்தனியாக வீடுகள் கட்டிக் கொண்டு வாழ ஆரம்பித்தன.
முதல் ஆடு இரக்க குணமுடைய அறிவாளி மற்றவர்களைக் கவரக்கூடிய பேச்சுத் திறமையும் அதற்கு இருந்தது. அன்பினால் கொடிய விலங்குகளையும் நண்பர்களாக்கி, காட்டில் யாரும் பயமில்லா வாழ்க்கை வாழ எண்ணியது. முதலில் அதனுடைய போதனையைச் சிறிய பிராணிகளிடம் ஆரம்பிக்க, நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனுடைய கனிவான அர்த்தமுள்ள சிந்தனையைத் தூண்டும் பேச்சுக்கள் அவைகளைக் கவர்ந்து இழுத்தன. தினமும் முதல் ஆடு வீட்டின் முன் உபதேசம் நடக்கும். நாளுக்கு நாள் பல புதிய பிராணிகள் சேர்ந்து கொண்டே இருந்தன.
ஒரு நாள் பெரிய ஓநாய் ஒன்று அங்கு வந்தது. அதைப் பார்த்து மற்ற பிராணிகள் பயந்து நடுங்கின. முதல் ஆடு தன் கவர்ச்சிப் பேச்சால் அவைகளுடைய பயத்தைப் போக்கியதுடன் ஓநாயைத் தன் அருகில் கூப்பிட்டு உட்கார வைத்துக் கொண்டது திருப்தியாகச் சாப்பிட்டு வந்த ஓநாய்க்குப் பசியில்லை. முதல் ஆட்டின பேச்சை ரசித்துக் கேட்டுத் தலையாட்டிக் கொண்டிருந்தது. கூட்டம் முடிந்தவுடன் கைகுலுக்கி ஓநாயை அனுப்பி வைத்தது. எப்பொழுது வேண்டுமானாலும் தாழ்ப்பாள் போடாத தன் வீட்டுக்கு வரச் சொன்னது. இந்த அதிசயத்தைப் பார்த்த மற்ற பிராணிகள் முதல் ஆட்டைப் பாராட்டின.
ஆனால் புத்திசாலியான இரண்டாம் ஆடு அசைவ உணவால் வாழும் மிருகங்களின் ஆபத்தை எடுத்துக் கூறியது. ஆனால், முதல் ஆடு அதைக் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. அன்பு கலந்த உபதேசத்தால் கொடிய மிருகங்களின் உணவுப் பழக்கத்தையே மாற்றி விடப்போவதாகச் சொன்னது.”கூரான பற்கள் உள்ள நமக்குப் பகலில் இந்த ஓநாயால் பயம் கிடையாது; இரவில் பாதுகாப்புக்காகக் கதவையாவது தாள் போட்டுக்ககொள்” என்று அது சொன்னதையும் அலட்சியம் செய்து விட்டது முதல் ஆடு.
ஒரு நாள் ஓநாய்க்கு இரை கிடைக்கவில்லை. அலைந்து திரிந்ததால் அதற்கு அகோரப் பசி உண்டான போது முதல் ஆட்டின நினைவு வந்தது.”பசி வந்தால் பத்தும் பறந்து போகும்” என்பது போல் அன்று இரவு எல்லோரும் தூங்கிய பின் முதல் ஆடு வீட்டுக்குச் சென்றது. தாழ்ப்பாள் போடாத கதவைத் திறந்து உள்ளே சென்றபோது முதல் ஆடு நன்றாக துங்கிக் கொண்டிருந்தது. பாவம் முதல் ஆடு, சிறிது நேரத்தில் ஓநாய்க்கு இரை ஆகிப்போனது
முதல் ஆட்டின அன்பும், அருளும், பண்பும், பாசமும், இரக்க குணமும் பயனில்லாமல் போய்விட்டன. அடுத்த நாள் இரண்டாம் ஆடு முதல் ஆட்டின் வீட்டிற்கு வந்து அங்கிருந்த எலும்புகளைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தது. அதற்கு ஓநாய் மேல் சந்தேகம் வர, அதனால் வரும் ஆபத்திலிருந்து தப்பிக்க அறிவோடு சிந்தனை செய்ய ஆரம்பித்தது.
முதல் ஆட்டைச் சாப்பிட்ட ஓநாய்க்கு அதன் சுவை மிகவும் பிடித்திருந்தது. இரண்டாம் ஆட்டையும் கபளீகரம் செய்ய இரவில் அங்கு வந்து வட்டமிட்டுக் கொண்டிருந்தது. ஜன்னல் வழியாக இதைப் இரண்டாம் ஆடு கவனித்தது. கதவு தாழ்ப்பாள் போட்டிருந்ததால் ஓநாய்க்கு உள்ளே போக முடியவில்லை. ஆனால் கதவைத் தள்ளிப் பார்ப்பதைப் பார்த்த புத்திசாலியான இரண்டாம் ஆடு அதை ஒழித்துக் கட்ட ஒரு வழி கண்டுபிடித்தது.
மறு நாள் இரவு இரண்டாம் ஆடு கதவைத் தாள் போடாமல் ஓநாய் நுழையும் இடத்தில் கருப்பான சுறுக்குக் கயிறை வைத்து அதன் மறு நுனியை ஜன்னல் கம்பியில் கட்டி வைத்தது. கதவைச் சிறிதாகத் திறந்து வைத்து வெளியே மறைவான இடத்தில் ஒளிந்து கொண்டது
எப்பொழுதும் போல் ஓநாய் அன்றும் இரண்டாம் ஆடு வீட்டுக்கு வந்தது. கதவு திறந்திருப்பதைப் பார்த்தவுடன் அதற்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. இரண்டாம் ஆட்டைக் கபளீகரம் செய்ய அவசரமாக உள்ளே நுழைந்தது. கறுப்பாக இருந்த சுருக்குக் கயிறு அதன் கண்ணில் படவில்லை. கழுத்து நன்றாக மாட்டிக் கொண்டு கயிறு இறுக்க ஆரம்பித்தது. பயந்துபோய் ஓநாய் துள்ளத் துள்ள, கழுத்தில் இறுக்கம் அதிகமாகி விட்டது. குரல்வளை நசுங்கி மூச்சுத் திணறி இறந்து போனது அன்றிலிருந்து ஓநாய் பயமில்லாமல் மகிழ்ச்சியாகப் இரண்டாம் ஆடு வாழ்ந்தது.
முதல் ஆட்டின அன்பு அதைப் பாதுகாத்துக் கொள்ளக்கூடப் பயன் படவில்லை. ஆனால், இரண்டாம் ஆடுக்கு அதனுடைய புத்திசாலித்தனம் உதவியது. அதனால் புத்திசாலித்தனத்தோடு அன்பு இருந்தால்தான் நாமும் வாழலாம்; மற்றவர்களையும் திருத்தி வாழ வைக்க முடியும்.