Oplus_131072
அப்பாவும் நானும்
அப்பாவைப் பார்க்கும்போதெல்லாம்
அப்பாவைப் போல் பிள்ளையிடம்
அதிகாரமாய் இருக்கக்கூடாது
என்று நினைத்தவன் நான்
‘கதைப்புத்தகம் படிக்காதே’
என்றார் அப்பா
‘மொபைலை நோண்டாதே’
என்கிறேன் நான்
‘சினிமாவுக்குப் போகாதே’
என்பார் அப்பா.
‘டி.வி அதிகம் பார்க்காதே’
என்கிறேன் நான்
‘எந்நேரமும் ஊர் சுற்றுகிறான்’
என்பார் அப்பா
‘பப்ஜி தவிர வேறு உலகம் இல்லையா’
என்றால் முறைக்கிறான் மகன்
அப்பாவுடன் கோபித்துக்கொண்டு
பதினெட்டு வயதில்
சென்னை ஓடியவன் நான்
‘அவர் ஏன் ஊருக்கு
அடிக்கடி வருகிறார்
அங்கேயே இருக்க வேண்டியதுதானே’
என்று அம்மாவைக் கேட்கிறான் பையன்
அப்பாவைப் போல் இருக்கக்கூடாது
என்று நினைத்தவன் முகத்தைக்
கண்ணாடியில் பார்க்கும்போது
அப்பா போலவே என் முகமும்
இருப்பதாய்
கூணுக்குறுகிறேன் இப்போதெல்லாம்.




