நம்முள் பெரும்பாலானவர்கள் நினைத்துக் கொள்கிறோம், ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு ஏதோ ஒன்றன் பின்னால், ஏன் ஓடுகிறோம் என்றே தெரியாமல் ஓடுவதே சிறந்த வாழ்க்கை என்று.
என் சிறு வயது நினைவுகளாக, என் மூளையில் ஏதோ ஒரு பகுதியில் மிச்ச சொச்சமாக ஒட்டியிருக்கும் சில விஷயங்கள் உங்களுக்காக.
எங்கள் வீடு ஒரு மண் குடிசை வீடு தான். வீட்டின் கூரை பனை ஓலையால் வேயப்பட்டிருக்கும்.
வீட்டினுள் ஓர் மரத்தால் ஆன பீரோ.
என் தாய்க்கு சீதனமாகக் கொடுத்த இரும்புக் கட்டில்.
அந்த காலத்து பிளாக் அண்ட் ஒயிட் பிபிஎல் டிவி.
பேனாசோனிக் நிறுவனத்தின் ஒரு டேப் ரெக்கார்டர்.
இதைச் சுற்றியே என்னுடைய வாழ்க்கை சிறகடித்துக் கொண்டிருந்தது.
மண்குடிசையில் மழைக்காலத்தில் வருமே ஒரு வாசனை. கடந்த 10 ஆண்டுகளில் எனக்கு எங்குமே அது கிடைக்கவில்லை.
எங்கள் பக்கத்து வீட்டு சொக்கலிங்கம் தாத்தா அவர்களின் திண்ணையில், தெருவிலுல்ல யாராவது ஒருவர் எப்போதும் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள்.
எங்கள் பின்வீட்டு முட்டகண் ரெட்டியார் தாத்தா வீட்டில் சிறுவர்கள் எப்போதும் விளையாடிக் கொண்டிருப்போம்.
பச்சையம்மா அத்தை வீட்டு எரவானத்தில் கோழி முட்டை திருடிக் குடித்துவிட்டு, கமுக்கமாக வீட்டில் வந்து படுத்துக் கொண்டதெல்லாம் மறக்குமா என்ன?
எப்போது அவர்கள் வீட்டுக்குச் சென்றாலும் பப்பாளி பழம் சாப்பிடக் கொடுக்கும் பப்ளிப் பெரியம்மா.
எங்கள் தெருவில் இருந்த அனைவரது வீட்டிலும் அவ்வளவு உரிமையாக சுற்றித்திரிந்த காலம் அன்று.
இன்று, கான்கிரீட் வீடுகள் அனைத்திற்கும் முட்டுக்கட்டை போட்டுவிட்டது.
யாரும் நம்மை பார்க்கா வண்ணம், சுற்றிலும் காம்பவுண்ட் எழுப்பி சிறைக் கைதிகளாக மாறிவிட்டோம்.
ஒன்றுமே இல்லாத வீட்டில் கூட இரண்டு ஆள் உயரத்திற்கு கிரில் கேட்.
என்ன காரணத்திற்காக ஒவ்வொரு குடும்பமும் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொள்கிறோம் என்பது எனக்குத் தெரியவில்லை.
கிரி, ஓடிப்போய் லட்சுமி அக்கா வீட்டில் ஒரு கிளாஸ் மிளகாய்த்தூள் வாங்கி வா.
கிரி, கிருஷ்ணம்மாள் ஆயா கிட்ட நான் ரெண்டு முருங்கைக்காய் கேட்டேனு போய் கேளு.
இந்தா, இந்த மீன் குழம்ப ஜெயந்தி சித்தி வீட்ல குடுத்துட்டு வா.
ஜானகி அத்தை வீட்ல சர்க்கரை கொஞ்சம் வாங்கிட்டு வா.
இந்த பண்டமாற்று முறைகள் பெரும்பாலும் தற்போது அழிந்தேவிட்டது. மனிதர்களிடம் முகம் கொடுத்து பேசுவதையே, சிறிது சிறிதாக தவிர்த்து வருகிறோம் நம் தலைமுறையினர்.
எப்போது படிப்பை முடிப்போம் வேலைக்கு வெளிநாடு பறப்போம் என்று சிந்திக்கும் புத்தி, கிடைத்த ஒரு வாழ்க்கையை எப்படி வாழப் போகிறோம் என்பதை யோசிக்க மறந்து விடுகிறது.
கடைசியாக எப்போது ஒரு நபரிடம், எந்த ஒரு அவசரமும் இல்லாமல் மகிழ்ச்சியாக பேசி சிரித்தீர்கள்?
அப்புறம் பேசுறேன் டா வேலைக்கு டைம் ஆச்சு.
சாரிடா, போன் எடுக்க முடியல கொஞ்சம் பிசி.
ஏம்மா சும்மா எதையாவது பேசிக்கிட்டே இருக்க?
அப்பா, கேம் விளையாடும் போது டிஸ்டர்ப் பண்ணாதீங்க.
அனைவருமே மனிதர்களோடு சஞ்சரிப்பதை வெறுக்க ஆரம்பித்து விட்டோம்.
இவ்வளவு அவசர அவசரமாக வாழ்க்கையை வாழ்வது தானா மனித குலத்திற்குப் பெருமை?
டெக்னாலஜி, மனிதர்களுக்குள் இருக்கும் இடைவெளியை அதிகரித்து விட்டது. நான் இணையத்துறையை தேர்வு செய்ததில் ஒருபுறம் மகிழ்ச்சி இருந்தாலும், மனிதர்களை விட்டு தூர விலகிவிட்டது போல் சில சமயம் உணர்வது மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
அப்படி என்ன பெரிய மண்ணாங்கட்டி வேலை இது. பூமியில் இருந்து கொண்டே வேற்றுகிரகவாசி போல வாழ்வது.
சிறுவயதில் இருந்தது போல் வாழ ஆசைப்படுகிறேன்.
அந்த பழைய BPL டிவியில் ஆண்டனாவைத் தட்டி தட்டி சக்திமான் பார்க்க வேண்டும்.
எங்கள் குடிசை வீட்டு ஓலை இடுக்கில் கௌலி சத்தத்தைக் கேட்க வேண்டும்.
மழைக்காலத்தில், வீட்டில் தண்ணீர் ஒழுகும்போது, கேரம் போர்டு காய் நகர்த்தல் போல, குண்டான் சட்டிகளை நகர்த்த வேண்டும்.
ஊர் பனை மரத்தில், திருட்டுத்தனமாக உச்சிக்கள் இறக்கிக் குடிக்க வேண்டும்.
திறன்பேசி இல்லாமல் திரிய வேண்டும்.
செயலிகள் இல்லாமல் செயல்பட வேண்டும்.
பம்பர சாட்டையின் “டப்” என்ற அடி.
கண்ணாடி கோலியின் “டின்” என்ற ஒலி.
மண்ணில் உருண்டு பிரண்டு விளையாடி, எட்டியாத்தம்மன் கோவில் குளத்தில் குளிக்க வேண்டும் மீண்டும்.
வெறும் நினைவுகளில் மட்டுமே இருக்கும் இந்த விஷயங்கள் உண்மையிலேயே ஒரு பொக்கிஷம் தான்.
பாருங்கள், இதையும் கூட ஒரு நபரிடம் பேசி மகிழ முடியாமல், இந்த செயலியில் புலம்பிக் கொண்டிருக்கிறேன்.
அட்டைப்பூச்சி போல் நமது கைகளைப் பற்றிக் கொண்டிருக்கும் திறன்பேசிகள்.



