Oplus_131072
ஆடி மாதம் அம்மனுக்கு கூழ் ஊற்றுவதன் காரணம்
ஆடி மாதத்தில்.. அம்மன் கோவில்களில் கூழ் ஊற்றுவது ஏன் தெரியுமா?..
ஆடி மாதம் வந்துவிட்டாலே கோவில்களில் திருவிழாக்கள் களைகட்டி விடும். அதில் முக்கியமானது அம்மன் கோவிலில் ஊற்றப்படும் கூழ் மிகவும் மகத்துவம் வாய்ந்தது.
ஆடி மாதத்தில் அம்மனுக்கு கூழ் செய்து பக்தர்களுக்கு வழங்கினால், அன்னையின் மனம் குளிர்ந்து அருள் தருவாள் என்பது நம்பிக்கை.
பார்வதியின் தவத்தில் மகிழ்ந்த பரமசிவன், ஆடி மாதம் அம்மன் மாதமாக இருக்க வேண்டும் என வரம் கொடுத்தார். அதனால்தான் சிவனுடைய சக்தியைவிட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும். ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகிவிடுகிறார் என்பது ஐதீகம். இம்மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
ஆடி வெள்ளி வழிபாடு செய்வதால் திருமண பாக்கியம் கைகூடும், நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் எதிர்பார்த்திருப்போருக்கு குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை.
ஆடி மாதத்தில் பால்குடம் எடுத்தல், பொங்கல் வைத்து வழிபடுதல், சிறப்பு பூஜைகள் செய்தல், தீ மிதித்தல், கூழ் ஊற்றுதல், அம்மன் கோவில்களுக்கு சென்று வழிபடுதல் என்று இந்த மாதம் முழுவதும் வழிபாட்டு மாதமாகிறது. ஆடி வெள்ளி, ஆடி செவ்வாய், ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், ஆடிக்கிருத்திகை, ஆடித்தபசு, ஆடி பௌர்ணமி, ஆடிப்பெருக்கு என்று பல விசேஷ நாட்கள் இந்த மாதத்தில் வருகின்றன. இத்தகைய விசேஷ நாட்களில் விரதமிருந்து அம்மனை வழிபட்டால் நினைத்தது நிறைவேறும்.
*ஆடி மாதத்தில் கூழ் ஊற்றுவது ஏன்?*
தவத்தில் சிறந்து விளங்கிய ஜமத்கனி முனிவரை, பொறாமை காரணமாக கார்த்த வீரியார்சுனனின் மகன்கள் கொன்று விடுகின்றனர். இதை கேள்விப்பட்டு துக்கம் தாங்க முடியாமல் ஐமத்கனி முனிவரின் மனைவி ரேணுகாதேவி உயிரை விட முடிவு செய்து தீயை மூட்டி அதில் இறங்குகிறார்.
அப்போது இந்திரன் மழையாக மாறி தீயை அணைத்தார். தீக்காயங்களால் ரேணுகாதேவியின் உடலில் கொப்புளங்கள் ஏற்பட்டன. வெற்றுடலை மறைக்க அருகில் இருந்த வேப்பமர இலைகளை பறித்து ஆடையாக அணிந்தார்.
ரேணுகாதேவிக்கு பசி ஏற்பட்டதால் அருகில் உள்ள கிராம மக்களிடம் சென்று உணவு கேட்டார். அப்போது மக்கள் அவருக்கு பச்சரிசி, வெல்லம், இளநீரை உணவாக கொடுத்தனர். இதைக்கொண்டு ரேணுகாதேவி கூழ் தயாரித்து உணவருந்தினார்.
அப்போது சிவபெருமான் தோன்றி ரேணுகாதேவியிடம், உலக மக்களின் அம்மை நோய் நீங்க நீ அணிந்த வேப்பிலை சிறந்த மருந்தாகும். நீ உண்ட கூழ் சிறந்த உணவாகும். இளநீர் சிறந்த நீராகாரமாகும் என்று வரம் அளித்தார். இச்சம்பவத்தை நினைவு கூறும் வகையில் ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் கூழ் வார்க்கும் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இன்றைய காலகட்டத்தில் பல நவீன தடுப்பூசிகளால் அம்மை நோய் பரவலாக குறைந்துள்ளது. ஆனால் 100 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த நோயின் தாக்கம் ஆடி மாதத்தில் அதிக அளவில் இருந்தது. இதற்கு காரணம் ஆடி மாதத்தில் நிலவும் தட்ப வெப்ப நிலையே காரணம் ஆகும். இந்த மாதத்தில் ஒரு விதமான அதீத வெப்பமும், வறட்சி காற்றும் அதிகம் இருக்கும். இதனால் பல்வேறு நோய்கள் மக்களை தாக்கியது. அதில் மிக கொடிய நோயாக கருதப்பட்டது அம்மை நோயே. இதனால் சிலர் இறந்தும் போனார்கள். இதை தவிர்க்கவே, ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் கூழ் ஊற்றும் வழக்கத்தை கடைபிடித்து வந்தனர். இதை ஆடிக்கஞ்சி என்பர்.




