Oplus_131072
கர்ப்பிணி குங்குமப் பூ சாப்பிடுவதால் குழந்தை கலராக பிறக்குமா?
எனக்கு தெரிந்த ஒருவருக்கு சில வருடங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. அவர் என்னிடம் எனது மகள் மிகவும் கருப்பாக இருக்கிறாள் என்று ஆதங்கப்பட்டார்.
ஆதங்கப்பட்டதாேடு மட்டும் இல்லாமல் என் மனைவிக்கு குங்குமப்பூ வாங்கி கொடுக்காமல் விட்டுவிட்டேன்., குழந்தை கருப்பாக பிறந்ததற்கு அதவும் ஒரு காரணம் என்று என்னிடம் சொன்னார். அச்சமயம் நான் அவரிடம் எதிர்வினை ஆற்றாமல் குழந்தை நல்ல படியாக பிறந்ததற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டு வந்துவிட்டேன்.
இதை ஏன் இங்கு சொல்கிறேன் என்றால் தாயும், சேயும் எந்த வித பிரச்சனையும் இல்லாமல் குழந்தை நல்ல முறையில் பிறந்தாள் போதாதா..பிறகு ஏன் குழந்தை நிறத்தின் மீது மனிதன் இவ்வளவு கவலை கொள்கிறான் என்று தான் தெரியவில்லை.
கருப்பு நிறம்தான் நமது மண்ணின் உண்மையான வண்ணம். ஆனால் வெள்ளை மற்றும் சிகப்பு நிறத்தின் மீது இருக்கும் மோகம் இவர்களுக்கு எங்கிருந்து வந்தது என்றுதான் தெரியவில்லை….. இது ஒரு புறம் இருக்கட்டும்.
சரி….. குங்குமப்பூவை கர்ப்பிணி பெண்கள் சாப்பிட்டால் குழந்தை சிவப்பாக பிறக்கும் என்று சொன்னது யார்? என்று தேடிப்பார்த்ததில் தெளிவான விளக்கம் எதுவும் எனக்கு கிடைக்கவில்லை. காலம் காலமாக இந்த குங்குமப்பூவை கர்ப்பிணி பெண்களுடன் தொடர்பு படுத்தி வந்துள்ளனர் என்பதே இங்கு தெளிவாகிறது.
குங்குமப்பூவை பாலில் கலந்து சாப்பிட்டால் குழந்தை சிகப்பாக பிறக்கும் என்னும் விளக்கம் இதுவரை எந்த அறிவியலாலும் விளக்கப்படவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. இது ஒரு மேம்போக்கான கட்டுக்கதை என்றே மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.
கருவில் இருக்கும் குழந்தையின் நிறத்தை தீர்மானிப்பது தாய்+தந்தை இருவரின் மரபணுக்களே! அதாவது பெரும்பாலும் குழந்தைகள் தாய் மற்றும் தந்தையின் நிறத்திலே பிறக்கத்தான் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
இன்னும் தெளிவாக சொல்லப்போனால் தந்தையின் விந்துச்செல்லில் காணப்படும் DNA அல்லது தாயின் அண்டசெல்லில்(கருமுட்டை) காணப்படும் DNA மரபணுக்களால் மட்டுமே பிறக்கப்போகும் குழந்தையின் நிறமானது தீர்மானிக்கப்படுகிறது….அந்த நிறமானது கடத்தப்பட்ட மரபுப் பண்பிற்கு ஏற்ப தாய்+தந்தை இருவரை ஒத்த நிறமோ அல்லது அவர்களது மூதாதையர் ஒருவரின் நிரமாக இருக்கக்கூட வாய்ப்பு உள்ளது. டாக்டர்.கி.மெண்டல் என்பவரின் ஆய்வின் மூலம் இது நிருபணமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் நமது உடலின் நிறத்தை மெலனின் என்ற ஒருவகை நிறமியும் கட்டுப்படுத்துகிறது. இந்த நிறமி அதிகமாக உள்ளவர்கள் கருப்பாகவும், அதே சமயம் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு திறனுடையவர்களாகவும் திகழ்கின்றனர். மெலனின் என்ற நிறமி இல்லாதவர்கள் சற்று நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களாக திகழ்கின்றனர். ஆக கருப்பாக இருப்பது ஒரு வகையில் நல்லதுதான்.
மேலே சொன்ன தகவலின் அடிப்படையில் தாய்+தந்தை இருவரின் மரபணுக்கள் தான் தங்களின் குழந்தையின் நிறத்தை தீர்மானம் செய்கிறதே தவிர குங்குமப்பூ அல்ல.
இந்த கட்டுக் கதைக்கு குங்குமப்பூ வியாபாரிகளின் வியாபார தந்திரமாகக் கூட இருக்கலாம்.
குங்குமப்பூ விற்கின்ற விலைக்கு குழந்தை சிகப்பாக பிறக்க வேண்டும் என்று சிகப்பு தங்கம் என்று வர்ணிக்கப்படும் குங்குமப்பூவை கிலோ கணக்கில் வாங்கி சாப்பிட்டால் கெடுதல் நமக்கு தான் என்பதை இங்கு ஆணித்தரமாக கூறிக்கொள்கிறேன். இருப்பினும் குங்குமப்பூவை கர்ப்பிணி பெண்கள் சாப்பிடுவதாலும் சில நன்மைகள் இருக்கத் தான் செய்கிறது.
கர்ப்பிணி பெண்கள் குங்குமப்பூவை சாப்பிடுவதின் சில நன்மைகள்:
மசக்கை காலத்தில் பெண்கள் வெறும் பாலாக சாப்பிட்டால் குமட்டல், வாந்தி ஏற்படும். இதனை தவிர்க்க குங்குமப்பூவை சிறிது பாலில் கலந்து சாப்பிட்டால் இது போன்ற வாந்தி, குமட்டலை கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படாமல் இந்த குங்குமப்பூ தடுக்கிறதாம்.
கர்ப்பிணி பெண்களுக்கு இந்த குங்குமப்பூ செரிமாணத்தையும் ஏற்படுத்த கூடியதாக திகழ்கிறதாம்.
குங்குமப்பூவில் இரும்புச்சத்து அதிகமாக இருக்கிறதாம். இதனால் கர்ப்பிணி பெண்களின் இரத்த உற்பத்திக்கும், உடல் ஆற்றலுக்கும் வழிவகுக்கிறதாம்.
குங்குமப்பூவில் உள்ள ஆண்டி ஆக்சிடெண்டுகள் தாய்க்கும், குழந்தைக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறதாம்.
இவ்வாறாக குங்குமப்பூவால் கர்ப்பிணி பெண்களுக்கு சில நன்மைகள் இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனை பெற்ற பின் உபயோகப்படுத்துவது நலம்.
ஆக கர்ப்பிணி பெண்கள் குங்குமப்பூவை சாப்பிட்டால் குழந்தை சும்மா தக தக வென்று சிகப்பாக எல்லாம் பிறக்காது. குழந்தையின் நிறத்தை தீர்மானிப்பது தாய், தந்தையராகிய நாம் மட்டுமே. ஆதலால் குழந்தை சிகப்பாக பிறக்கும் என்று நினைத்து கிலோ கணக்கில் குங்குமப்பூவை வாங்கி கடனாளியாக அலைவதை விட குழந்தை ஆரோக்கியமாக பிறக்க கர்ப்பிணி பெண்களுக்கு நல்ல ஊட்டச்சத்து மிகுந்த உணவை வழங்குவதற்காக செலவழியுங்கள்.
கடைசியாக….
ஒருவரின் முன்னேற்றத்தை தீர்மானிப்பது நிறம் அல்ல அவரின் அறிவும், திறமையும் மட்டுமே. ஆதலால் நிறத்தின் மீது உள்ள மோகத்தை விட்டொழியுங்கள்.




