கிருஷ்ணகிரியில் காருக்குள் தம்பதி சண்டை: மனைவியை கொன்ற கணவன் கைது!

 

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே சின்னபேள கொண்டப்பள்ளியைச் சேர்ந்த விவசாயி எல்லப்பா (32), தனது மனைவி பிரேமா (28) மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வந்தார். மகன்கள் இருவரும் கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் படித்து வருகின்றனர்.

மூத்த மகனின் பிறந்தநாளையொட்டி புத்தாடை வாங்கிக் கொடுத்து, குழந்தைகளை பார்த்துவிட்டு கணவன் – மனைவி காரில் வீடு திரும்பினர். இரவு நேரத்தில் காருக்குள் இருவருக்கும் இடையே திடீரென கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால், எல்லப்பா காரை சாலையோரம் நிறுத்தினார்.

சண்டை முற்றிய நிலையில், பிரேமா காரில் இருந்த கத்தியால் கணவரை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. அவரை தடுத்த எல்லப்பா, கத்தியை பறித்து ஆத்திரத்தில் மனைவியை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த பிரேமா காரிலேயே உயிரிழந்தார்.

பின்னர் மனைவியின் உடலை காரில் இருந்து இறக்கிவிட்டு, காயங்களுடன் காவல் நிலையத்துக்குச் சென்ற எல்லப்பா, நடந்ததை போலீசாரிடம் கூறி சரணடைந்தார். அவரை மருத்துவமனையில் அனுமதித்த போலீசார், பிரேமாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

விசாரணையில், தம்பதியிடையே ஏற்கனவே குடும்ப பிரச்சனை இருந்ததும், சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்ததும் தெரியவந்தது. மேலும், கணவருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக கூறி பிரேமா சமீபத்தில் போலீசில் புகார் அளித்திருந்தார்.

அப்போது காவல் நிலையத்தில் நடந்த பேச்சுவார்த்தையின்போது ஏற்பட்ட அவமானத்தை எல்லப்பா மனதில் வைத்திருந்ததாகவும், அதன்பின்னர் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழத் தொடங்கிய நிலையில் இந்த கொலை நடந்ததாகவும் போலீஸ் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Previous

ஹெட்டிங்லே மைதானத்தில் ரசிகருக்கு நேர்ந்த காமெடி சம்பவம்!

Read Next

ரத்தத்தை சுத்திகரித்து., சோம்பேறித்தனத்தை உடைத்தெறிய உதவும் திராட்சை ஜூஸ்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular