சிறுநீரில் நுரை தோன்றுதல்: ஓர் அமைதியான எச்சரிக்கை..!!

Oplus_131072

 

சிறுநீரில் நுரை தோன்றுவது எப்போதும் ஆபத்தானதல்ல; சிறுநீரை வேகமாக வெளியேற்றுவது, உடலில் நீர்ப்பற்றாக்குறை (Dehydration) அல்லது கழிவறைகளை சுத்தம்செய்யப் பயன்படும் இரசாயனங்கள் போன்ற சாதாரண காரணங்களாலும் நுரை உருவாகலாம். இத்தகைய நுரைகள் மிக விரைவாக மறைந்துவிடும் என்பதோடு, இவை அவ்வப்போது மட்டுமே நிகழும். எனவே, இவ்வாறான நேரங்களில் நீங்கள் அச்சப்படத் தேவையில்லை.

இருப்பினும், சோப்பு நுரை போன்ற தடிமனான நுரை தொடர்ச்சியாக ஒவ்வொரு முறையும் வெளியேறினால் அது சிறுநீரகப் பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம். குறிப்பாக, அதனுடன் சேர்த்து உடல் சோர்வு, முகம் அல்லது கால்களில் வீக்கம் போன்ற அறிகுறிகள் காணப்பட்டால், அது சிறுநீரில் புரதம் (Protein) வெளியேறுவதைக் குறிக்கலாம். இவ்வாறான நிலையில், காலதாமதம் செய்யாமல் ஒரு சிறுநீர் பரிசோதனை (UFR) செய்து மருத்துவர் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.

சிறுநீரில் நுரை ஏன் உருவாகிறது?
சிறுநீரகங்கள் என்பவை நமது உடலில் இரத்தத்தைச் சுத்திகரிக்கும் கருவிகளாகும். இவை உடலுக்குத் தேவையான புரதங்களை இரத்தத்திலேயே தக்கவைத்து, தேவையற்ற கழிவுகளை மட்டும் வெளியேற்றுகின்றன.

சிறுநீரகத்தின் வடிகட்டும் அலகுகள் பாதிப்படையும் போது, புரதம் கசிந்து சிறுநீருடன் கலக்கிறது (குறிப்பாக Albumin எனும் புரதம்). புரதம் கலந்த சிறுநீர், சிறுநீர் கழிக்கையில் நுரைகளை உருவாக்கும். இதை மருத்துவத்தில் Proteinuria என்று சொல்வார்கள்.

நீங்கள் கவனிக்க வேண்டிய 03 முக்கிய அறிகுறிகள்
சிறுநீரகப் பாதிப்பு ஏற்படும் போது சிறுநீர் கழிக்கும் போது நுரை தோன்றுவதுடன் உடல் பின்வரும் அறிகுறிகளும் தோன்றும்:

கண்கள் மற்றும் பாதங்களில் வீக்கம் (Oedema):
சிறுநீரகங்கள் வழியாக புரதம் வெளியேறும்போது, இரத்தத்தில் புரத அளவு குறைகிறது. இதனால் இரத்த நாளங்களில் உள்ள திரவம் திசுக்களுக்கு இடையே கசியத் தொடங்கும். இதன் விளைவாகக் காலையில் எழும்போது கண்களுக்குக் கீழே வீக்கமும், மாலையில் கணுக்கால் மற்றும் பாதங்களில் வீக்கமும் ஏற்படும்.

அதிகப்படியான சோர்வு மற்றும் வெளிறிய தன்மை (Anaemia):
இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்யத் தேவையான Erythropoietin எனும் ஹார்மோன் சிறுநீரகங்களிலேயே உற்பத்தியாகிறது. சிறுநீரகங்கள் பாதிக்கப்படும்போது இந்த ஹார்மோன் குறைவடைந்து இரத்த சோகை (Anaemia) ஏற்படுகிறது.

பசியின்மை மற்றும் குமட்டல்:
கழிவுகள் சரியாக அகற்றப்படாததால் இரத்தத்தில் ‘யூரியா’ மற்றும் ‘கிரியாட்டினின்’ அளவு அதிகரிக்கிறது. இதனால் வாயில் ஒருவித உலோகச் சுவை (Metallic taste), குமட்டல் மற்றும் பசியின்மை ஏற்படலாம்.

சிறுநீரகங்களின் வடிகட்டும் அலகுகள் பாதிப்படைவதற்கு பல காரணங்கள் இருந்தாலும், பிரதானமானவை இவைதான்:

நீரிழிவு நோய் (Diabetes):
நீண்டகாலமாக இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பது நுண்ணிய இரத்தக் குழாய்களை பாதிப்படையச் செய்யும்.

இரத்த அழுத்தம்:
கட்டுப்பாடற்ற உயர் இரத்த அழுத்தம் சிறுநீரகத்தின் பகுதிகளை நேரடியாகப் பாதிக்கும்.

வலி நிவாரண மாத்திரைகள்:
மருத்துவ ஆலோசனையின்றி அடிக்கடி பயன்படுத்தப்படும் வலி நிவாரண மாத்திரைகள் (NSAIDs) சிறுநீரகத்திற்கு கேடு விளைவிக்கலாம்.

அதிகளவில் உப்பு உட்கொள்ளல்:
உணவில் சேர்க்கப்படும் அதிக உப்பு, இரத்த அழுத்தத்தை அதிகரித்து சிறுநீரகத்தின் வடிகட்டும் அலகுகளை பாதிக்கிறது.

சிறுநீரில் நுரை தோன்றினால் என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் சிறுநீர் கழிக்கும் போது ஓரிருமுறை மட்டும் நுரை தோன்றினால் பயப்படத் தேவையில்லை. ஒவ்வொருமுறையும் அல்லது அடிக்கடி நுரை தோன்றினால், அது சிலவேளைகளில் சிறுநீரகப் பாதிப்பின் ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம். அதை உறுதிப்படுத்திக் கொள்ளப் பின்வரும் மருத்துவப் பரிசோதனைகளைச் செய்யலாம்.

சிறுநீர் பரிசோதனை – UFR (Urinalysis):
சிறுநீரில் புரதக் கசிவு இருப்பதை அறியும் எளிய சோதனை.

இரத்த கிரியாட்டினின் (Serum Creatinine):
இது சிறுநீரகத்தின் வடிகட்டும் திறனை கண்டறியும் இரத்தப் பரிசோதனை.

ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள்:
நாளொன்றுக்குத் தேவையான அளவு சுத்தமான நீரை அருந்துதல்.

உணவில் உப்பின் அளவைக் குறைத்தல் (அதிகளவு கருவாடு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்த்தல் மற்றும் குறைத்தல்).

சர்க்கரை நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் இருப்பின் அவற்றை கட்டுப்பாட்டில் வைத்திருத்தல்.

சிறுநீர் கழிக்கும் போது தோன்றும் நுரைக்குக் காரணம் ‘உடல் சூடு’ என்றும் சிலவேளைகளில் அலட்சியமாக இருந்துவிடுகிறார்கள்.

சிறுநீரக நோய் என்பது மெதுவாக உருவாகும் ஒரு பாதிப்பு. ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் அதனை முழமையாகக் குணப்படுத்தவோ அல்லது கட்டுப்பாட்டில் வைக்கவோ முடியும். இன்று நீங்கள் காட்டும் ஒரு சிறிய விழிப்புணர்வு, பின்னாளில் பாரிய பாதிப்புகளைத் தவிர்க்க உதவலாம்.

 

குறிப்பு:
இக்கட்டுரை பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இது ஒரு மருத்துவரின் ஆலோசனைக்கு மாற்றானது அல்ல. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சுயமாக முடிவெடுக்காமல் மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்வது அவசியமானதாகும்.

Read Previous

பெருமாள் கோவில்களில் தீர்த்தமும் ,சிவாலயங்களில் விபூதியும் தருவதற்கான விளக்கம்..!!

Read Next

எலும்பு தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கும் அத்திப்பழம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular