சுற்றுலாவிற்காக செர்பியாவிற்கு சென்றிருந்த இந்திய தம்பதியினருக்கு நேர்ந்த துன்புறுத்தல் சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
தகவல்களின்படி, அபர்ணா மாலு மற்றும் அவரது கணவர் அஜ்மல் கொலும்பில் ஆகியோர் செர்பியாவிற்கு சென்ற சில மணி நேரங்களிலேயே இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அவர்கள் படிக்கட்டுகளில் இறங்கிக் கொண்டிருந்தபோது, மூன்று அடையாளம் தெரியாத நபர்கள் பின்தொடர்ந்து வந்து, அபர்ணாவின் கைப்பையைப் பறிக்க முயன்றதுடன், அவரிடம் அநாகரீகமாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தை தம்பதியினர் தங்களது மொபைல் கேமராவில் பதிவு செய்யத் தொடங்கியதும், அந்த நபர்கள் தகாத வார்த்தைகளால் திட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, “ஏன் எதிர்த்து சண்டையிடவில்லை?” என்ற கேள்விகளுக்கு அபர்ணா பதிலளித்துள்ளார். “நாங்கள் அப்போது செர்பியாவிற்கு வந்து இரண்டு மணி நேரம்தான் ஆகியிருந்தது. அந்நிய நாட்டில் மோதலில் ஈடுபடுவது பாதுகாப்பான முடிவு அல்ல. எங்களின் முதல் முன்னுரிமை பாதுகாப்பாக அந்த இடத்தை விட்டு வெளியேறுவதுதான்” என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், இந்தச் சம்பவம் குறித்து உள்ளூர் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், உரிய விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு குறித்து பலரும் கவலை தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், ஆபத்தான சூழலில் அமைதியாகவும் புத்திசாலித்தனமாகவும் செயல்பட்ட தம்பதியினருக்கு சமூக வலைதளங்களில் ஆதரவும் பாராட்டும் குவிந்து வருகிறது.




