Oplus_131072
ஜப்பான் நாட்டில் முன்பு விசித்திரமான ஒரு பழக்கம் இருந்து வந்தது…
பெற்றோர்கள் வயதாகி முதுமையின் காரணமாக ஆற்றல் குறைந்து, மற்றவர்களுக்கு எவ்விதப் பயனும் அளிக்க முடியாத நிலைக்கு வந்து விட்டால்,
அவர்களைத் தூக்கிக் கொண்டு போய் உயரமான மலைகளின் மேல் வைத்து விட்டு வந்து விடுவார்கள்.
எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ள அம்முதியோர்கள் பசி, தாகத்தினால் தனிமையில் வாடி வதங்கி மடிவார்கள்.
இப்படியான சூழ்நிலையில் ஓர் இளைஞன் முதுமை அடைந்த தன் தாயை சுமந்து கொண்டு மரங்கள் சூழ்ந்த காட்டுப் பகுதியில் மலை உச்சியை நோக்கி நடந்து கொண்டு இருந்தான்.
தாய்,மகன் இருவருமே எதுவும் பேசவில்லை !
ஆனால் சிறிது நேரத்தில் தன் தோளில் இருந்த தாயார் ஏதோ ஒருவித மணம் கொண்ட மரங்களின் சின்னச்சின்னக் கிளைகளை ஒடித்து கீழே போட்டுக் கொண்டே வருவதை மகன் அறிந்தான்.
உடனே,
“அம்மா, ஏதோ ஒரு மாதிரியான மரத்தின் கிளைகளை ஒடித்துக் கீழே போட்டுக் கொண்டே வருகிறீர்களே! ஏன்?” என்று கேட்டான்.
அதற்கு தாயார்,
“”மகனே, நீ என்னை மலை மீது விட்டுவிட்டு வீடு திரும்பும் போது வழி தெரியாமல் திண்டாடக் கூடாதல்லவா !
இங்கே போடப்பட்டு உள்ள கிளைகளை கவனித்து நடந்தால் வழி தவறாமல் நீ பாதுகாப்பாக வீடு போய் சேரலாம்.
அதற்காகவே கிளைகளை அடையாளமாகப் போடுகிறேன் என்றாள்.
வயதாகி விட்டத் தன்னை தவிக்க விட்டுச் சென்றாலும் மகன் பத்திரமாக வீடு போய்ச் சேர வேண்டும் என்று நினைக்கும் பாசம் மிகுந்த இந்தத் தாயா பயனற்றவர் என்று உள் மனம் கேட்க,
அவன் தன் தாயை மீண்டும் தன் வீட்டுக்கே கொண்டு வந்து பாசத்துடன் பராமரிக்கலானான் .
அதன் பின்பு அந்தக் கொடூரமான பழக்கம் அந்த நாட்டை விட்டே ஒழிந்தது என்று அந்த நாட்டு கதை.
இந்தக் கதை சொல்ல வரும் கருத்து நம் வாழ்வுக்கு மிக மிக முக்கியம்.
தற்போது தன்னை கண்ணே மணியே என்று கொஞ்சிய தன் அப்பா, அம்மாவை வயதாகிப் போனதால் மாத வாடகைக்கு கட்டி வைத்து இருக்கும் இடத்தில் இரக்கமே இல்லாமல் மாதா மாதம் பணம் அனுப்பும் கேவலப் பயல்களை நாம் காண்கிறோம்.
நீ நல்லவனா கெட்டவனா என்று தெரிவதற்கு முன்னாலேயே தன் வயிற்றில் இடம் கொடுத்தவள் உன் தாய்.
நீ கெட்டவனாகவே இருந்தாலும் நீ சாப்பிட காத்துக் கொண்டு இருப்பது உன் தாய் மட்டும்தான்.
எத்தனை ஜென்மம் சம்பாதித்தாலும் நீ இருந்த வீட்டிற்கு உன்னால் வாடகை கொடுக்க முடியாது என்றால் அது உன் தாயின் கருவறை என்பதை மறந்து விடாதே !
எத்தனையோ கஷ்டங்கள், நஷ்டங்கள், துன்பங்கள், துயரங்கள், அசிங்கங்கள்,
அவமானங்கள் கடந்த பிறகும் ஒன்றுமே தெரியாதது போல் காட்டிக் கொன்டு குடும்பத்தின் மத்தியில் சிரித்துக் கொண்டிருக்கும் தந்தைக்கு நிகரான நம்பிக்கை ஊட்டும் புத்தகம் இந்த உலகில் வேறு ஏதும் இல்லை.
நம் பெற்றோர்கள் எப்போதும் நம் நலன் நினைப்பவர்கள்.
அவர்களைக் கண் போன்று பாதுகாப்போம்.
காலம் மாற மாற ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்.
பொண்டாட்டிக்கும் அம்மாவுக்கும் பிரச்சனகள் வரலாம்.
ஆனால் எவன் ஒருவன் தாயையும், மனைவியையும் கலங்காமல் காக்கிறானோ அவனே ஆண் பிள்ளை.
மனைவிக்காக கருவறையில் வாழ்ந்து வந்த பெற்ற தாயை விரட்டுபவன் ஆண்மைற்ற கோழைப் பயல் என்பதில் சந்தேகம் இல்லை.
அவனது கடைசி காலம் அதை விட கேவலமாக கொடியதாகவே இருக்கும்.
ஒரு காலத்தில் பொருளாதாரம் இல்லை என்றாலும் நாட்டின் சுதந்திரத்திற்காக தினமும் 60 கசை அடி அறுபது நாட்கள் தண்டனையை பெற்ற என் அப்பா அம்மாவை என்னால் இயன்ற வரை அன்றைய பொருளாதாரத்தில் பாதுகாத்தேன்.
ஆனால் என் தியாக உள்ளம் படைத்த வயதான என் அப்பா அம்மாவோ நான் முன்னேறி விட மாட்டானா? என்று கடவுளை அனுதினமும் வேண்டினர்.
என் அம்மா அப்பாவின் வேண்டுதல் இன்று பலித்தது.
இன்று அந்த தெய்வங்களைத் தேடுகிறேன்.
கிடைக்கவில்லை.
அம்மா அப்பாவை தவிக்க விட்டு விடாதீர்கள்.
அப்படி செய்தால் தெய்வம் உங்களை விட்டு சத்தியமாக விலகி விடும்.
சிறு வயதில் கொஞ்சிக் குலாவிய அம்மா அப்பாவின் உணர்வுகளை புரிந்து அவர்களை பாதுகாத்து கொஞ்சிக் கொண்டாடுங்கள்.
தனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றம்.
பகிர்வோம்.




