தனிக்குடித்தனம்..!! அருமையான கருத்துள்ள சிறுகதை பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

Oplus_131072

தனிக்குடித்தனம்( சிறுகதை)
அதென்னமோ தெரியல அவளுக்கு ரெண்டாவது மகனப்புடிக்கவே இல்ல. மூத்த மகனைப்புடிச்ச அளவுக்கு ரெண்டாவது மகனப் புடிக்காததுக்கு என்ன காரணமும் தெரியல. ரெண்டுபேரையும் 10 மாசம் சொமந்துதான் பெத்தா ரெண்டுபேரும் அதே ஆஸ்பத்திரில தான் பெத்தா. ரெண்டுபேருமே நல்லாத்தான் படிச்சாங்க. ஆனா இவனை மாத்திரம் மூத்தமகனைப்புடிச்ச அளவுக்கு புடிக்கல
பொதுவாச்சொல்லுவாங்க தலைச்சான் பிள்ள அம்மாவுக்கும் கடைக்குட்டி அப்பாவுக்கும் புடிக்கும்னு. அது ஏன்னு தெரியல
ஒருவேளை புருசன் மேல குத்தம் சொல்லுறப்ப ரெண்டாவது பிள்ளைக அப்பாவைச் சப்போர்ட் பண்ணுறதாலயா இல்ல ரெண்டாவதைப்பெறுகிறப்ப பிரசவத்துல அவஸ்த்தைப் பட்டதா லயா ந்னு தெரியல. அவன் என்ன செஞ்சாலும் தப்பாத்தெரியுது அவளுக்கு. அவனும் அதுக்குத்தோதா பொறுப்பில்லாமத்தான் இருப்பான். வெளியபோகும் போது லைட்ட பேன அமத்தமாட்டான்
துணிமணியக்கண்ட எடத்துல போட்டு வைச்சிருப்பான். ஒரு டாய்லெட்டக்கூட சுத்தமாப் பயன்படுத்தமாட்டான். ஆனா மூத்தவன் அதுக்கு நேர் எதிர். அவனுக்கு எல்லாம் ஒழுங்கா இருக்கனும் அது அது அந்த அந்த எடத்துல இருக்கனும் அம்மா வோட தேவை ஒனந்து செய்வான் அம்மாவுக்கு வேலைகள்ல கூடமாட ஒத்தாசையா இருப்பான். ஆனா செலவாளி இஸ்டத் துக்குச்செலவு பண்ணுவான். அது ஒரு விசயமாத்தெரியல அவளுக்கு.
மூத்தவனுக்குக் கலியாணம் பேசினப்ப அவன் இருந்தது பெங்களூர்ல. அங்கதான் வேலை அதுனால கலியாணத்துக்கு அப்புறம் அங்கயே தனிக்குடித்தனம் வைக்க வேண்டியதாப்போச்சு அதுல பயங்கர வருத்தம் இவளுக்கு. கூடவே இருந்து மகனப்பாத்துக்கனும் நு ஆசை. ஆனா என்ன செய்ய பெங்களூர்ல போய் இருக்க முடியாத சூழ்நிலை ஏன்னா புருசனும் ரெண்டா வது மகனும் இங்க இருக்குறப்ப எப்புடிப்போய் பெங்களூர்ல இருக்குறது முடியல அந்த ஆதங்கத்துல அடிக்கடி அங்க போயிருவா. அப்ப அவன் சொல்லுவான் “ ஏம்மா வீணா அலையுற நாங்க வந்து ஒன்னயப்பாத்துக்கிறோம் நீ அலைய வேணாம்” நு சொன்னாலும் கேக்கமாட்டா.
”அங்கபோய் புள்ளைக்கி நல்லதப்பொல்லதை ஆக்கிப்போடனும் அவனுக்கு என்னென்ன புடிக்கும்னு மருமகளுக்குத்தெரியாது நான் போய் செஞ்சு குடுப்பேன் அதை அவளுக்கும் கத்துக் குடுப்பேன்” நு சொல்லுவா. அது அடிக்கடி நடக்கும். இம்புட்டுக் கும் இவ அங்க போய் டேரா அடிக்கிறது மருமகளுக்கு அவ்வளவாப்புடிக்கிறது இல்லங்கிறது அவ பேசுறப்பத் தெரியும் ஆனாலும் அதை இவ பொருட்படுத்துறதில்ல
“ என் மகனை நான் பாக்காம யார் பாக்குறது”ன்னு சொல்லிட்டுக் கெளம்பிருவா. இங்க அப்பனும் மகனும் அவங்களுக்குப் புடிச்சதை செஞ்சோ இல்ல வாங்கியோ சாப்புடுவாங்க. அந்த மகன் மேல இருக்குற கரிசனம் இவங்க மேல அவளுக்கு இல்ல. இத சாட மாடயா அவ புருசன் சொல்லிப்பாத்தான் ஆனா அவ அதை ஒரு பொருட்டா மதிக்கிறதே இல்ல. இங்க இருக்குறப்பயும்
” எல்லாம் என் தலையெழுத்து ஒங்களைக் கட்டிக்கிட்டு அழுகனும்றது” நு பொலம்பிக்கிட்டேதான் எல்லாம் செய்வா
இது இப்புடிப்போய்ட்டு இருக்குறப்ப ரெண்டாவது மகனுக்கு பொண்ணு பாக்க ஆரம்பிச்சாங்க. அப்ப பொண்ணு வீட்டுல இருந்து வந்து இவங்க வீட்டப்பாத்துட்டு “ நல்லாப்பெரிய வீடாத்தான் இருக்கு அடுப்படி நல்லா விசாலமா இருக்கு கீழ ரெண்டு பெட்ரூம் . மேல ரெண்டு பெட்ரூம் கலியாணத்துக்கு அப்புறம் கீழ ஒன்னா சமைச்சி சாப்புட்டுட்டு படுக்க மேல போய்க்கிறலாம்”நு பொண்ணு வீட்டுக்காரங்க சொன்னப்ப
ஒடனே இவ சொன்னா” அது சரிவராது கலியாணத்துக்கு அப்புறம் அவங்க மேல தனியாக் குடித்தனம் போயிற வேண்டியதுதான் ஏதோ 30 வயசாகுது அவனுக்கு இம்புட்டு நாள் அவனை வைச்சி வளத்து எடுத்தாச்சு மருமக வந்தவன்ன புதுசாக்கலியாணம் பண்ணுனவுக முன்னப் பின்ன இருப்பாக அதுகளை வைச்சி சமாளிக்க என்னால முடியாது “ நு கறாறாப்பேசுனா
அப்ப அவங்க சொன்னாங்க” இது என்ன புதுசா இருக்கு நீங்க புருசன் பொண்டாட்டி ரெண்டுபேருதான் ஒங்களுக்கு வயசும் ஆயிருச்சு. நீங்க தனியா இருக்கமுடியுமா ஒங்களுக்கு ஒதவிக்கி ஆள் வேணாமா ஒங்களை பாத்துக்கலன்னா ஊர் ஒலகம் மருமகளைத்தான குத்தம் சொல்லுவாங்க வந்தவன்ன குடும்பத்தைப் பிரிச்சிட்டா இப்பயெல்லாம் குடுமபத்தைப் பிரிக்கிறதுக்குன்னே வருதுக அதச்சொல்லி திருத்தமாட்டாகளா அவங்களோட அப்பன் ஆத்தா” நு எங்களைத்தானே குத்தம் சொல்லுவாங்க”
“ அதெல்லாம் நாங்க பாத்துக்குவோம் கேக்குறவுகளுக்குச் சொல்லிருவோம்” தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறதான அவுகளைத் தொந்தரவு செய்ய எங்களுக்கு விருப்பமில்ல” நு சொல்லிருவோம்
“ சரிங்க ஒங்க விருப்பம் அதுல நாங்க தலையிடல” நு சொல்லிட்டுப்போய்ட்டாங்க.
அவங்க போனப்பின்னாடி அவளோட புருசன் கேட்டான் “ ஏன் டி நீ சொல்றது ஒனக்கே நாயமாப்படுதா? மூத்த பிள்ளைக்கி இங்க இருந்து பெங்களூர் போய் எல்லாம் ”நான் தான் பண்ணனும் அவளுக்கு ஒன்னும் தெரியாது” நு ஞாயம் சொல்லிட்டு அங்க அடிக்கடி போய் டேரா போட்ட. அதேதான இந்தமகனுக்கும் அவனக்கட்டிட்டு வாரவளுக்கு என்ன தெரியும் நீ கூட இருந்துஎல்லாம் சொல்லிக் குடுக்கலாம்ல அவனுக்குப்புடிச்சதைச்
சொல்லிக்குடுக்கலாம் சமைச்சிப்போடலாம், ஒனக்கு முடியாதப்ப ஒன்னை ஆஸ்பத்திரிக்கி அவன் கூட்டிட்டுப்போகலாம் ரெண்டு சமையல் ஒரே வீட்டுல நடக்கனுமா அதை ஊர் ஒலகத்துல கிண்டல் பண்ண மாட்டாகளா?”
”ஏற்கனவே அவனைக்கட்டி அழுதது எனக்குப்போதும் இனியும் அவனைக்கட்டி அழுகமுடியாது. அவன் பொழப்ப அவன் பாத்துக்கட்டும் இனிமே என்னால அவனுக்குச் சமைச்சிப் கொட்ட முடியாது இதுதான் என்முடிவு”
“ ஏன் டி இப்படிப்பேசுனா எப்படி பொண்ணு குடுக்குறவனும் குடுக்க யோசிப்பான் என்னடா மாமியார் ஒரு மாதிரி பேசு றாங்களே இவங்களை நம்பித்தான பொண்ணக்குடுக்கனும் மருமகளை நல்லாப்பாத்துக்குவாங்கன்னு நம்பி இங்க என்னடான்னா மொதல்லயே முறிச்சி விடுறாங்களே நு யோசிக்கமாட்டாங்களா?”
“இருந்து சண்ட வந்து பிரிச்சி விடுறதை விட முன்னாடியே பிரிச்சி விட்டுறது நல்லது மருமக கூடச்சண்டை போட எனக்குத்தெம்பில்ல. வயசும்மில்ல ஆளவிடுங்க”
”சரிம்மா நீசொல்லுறமாதிரியே தனிக்குடித்தனம் வைச்சிருவோம்”
“ இப்ப சொன்னீங்களே அது ஞாயம் இப்பத்தான் ஒங்களுக்குப் புரிஞ்சிருக்கு நாட்டு நடப்பு”
”தனிக்குடித்தனம் அவங்களுக்கு இல்ல ஒனக்கு நீ தனியா குடித்தனம் நடத்திக்கோ நான் அவங்களோட போயிடுறேன் ஒன்ன இனியும் என்னால சமாளிக்கமுடியாது” நு சொன்ன
அவனை பாத்து வாயடைச்சிப்போய் நின்னா அவ..

Read Previous

மதிப்பீடு ( சிறுகதை)..!! மனதை முற்றிலுமாக கலங்க வைத்த பதிவு..!!

Read Next

இந்த மாதிரி ஒரு முறை கேசரி செஞ்சு பாருங்க..!! அம்புட்டு ருசியா இருக்கும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular