Oplus_131072
மதிப்பீடு ( சிறுகதை)
இந்தமாசமும் அவரு வழக்கமா செய்யிறவேலைக்கிக்கெளம்புனாரு. அவரு சம்சாரம் வழக்கம்போல சிரிச்சா. ம்ம் நடக்கட்டுமுன்னு. ரெண்டு சின்ன சைஸ்ல பைகள் ரேசன் கார்டு கொஞ்சம் பணம் எடுத்துக்கிட்டு (மாசக்கடைசிவேற) ரேசன் கடைக்கிப்போனாரு. இன்னிக்கின்னு அதிசயம். கடைல ஆளுக ஆரும் இல்லை. ஃப்ரீயாக்கெடந்துச்சு. பக்கத்துபோர்டுல து,பருப்பு, சர்கரை, பாமாயில் அரிசி இருப்புன்னு போட்டிருந்துச்சு.
இவரைப்பாத்தவன்ன கடைக்காரு கேட்டாரு அரிசி வாங்குறீங்களான்னு கேட்டாரு. ஆமான்னு சொல்லிட்டு ஆனா அதுக்கு சாக்கு எடுத்துட்டு வரலியேன்னு சொன்னதும் அவர் சொன்னாரு இருங்க அய்யா நான் தயார் பண்ணித்தாறேன்னு ஒரு பாலித்தீன் சாக்கு ரெடி பண்ணிக் குடுத்தாரு. பில்லுபோடட்டுமான்னு கார்டைகேட்டு வாங்கிபில்லப்போட்டாரு போட்டுட்டு93ரூவாங்கய்யான்னாரு.போனமாசம் காசுகேக்கலையேன்னாரு அவரு. அய்யா அது போனமாசம். இந்தமாசம் காசு வாங்கச்சொல்லிட்டாங்கய்யான்னாரு
துவரம்பருப்பு 1கிலோ சர்கரை 2கிலோ பாமாயில் ஒருலிட்டர் அரிசி 20 கிலோ ந்னு சொல்லி எடை போட்டுக்குடுத்தாரு.
அப்ப ஒருத்தர் பொருள்கள் வாங்க வந்தவரு கிட்ட கடைக்கார் சொன்னாரு. இவரு அரிசி பருப்பு எண்ணை வாங்கி யாருக்காவது குடுத்துருவாருன்னு சொன்னவன்ன அவரு கேட்டாரு பாமாயில் எனக்குக்குடுங்க காசு குடுத்துடுறேன்னாரு.. அதுக்கு இவரு சொன்னாரு. ஒங்களைவிட இல்லாதவங்க இருக்காங்க. அவங்களுக்குத்தான் சும்மாகுடுப்பேன்னாரு. அவரு சொன்னாரு பொழைக்கத்தெரியாதமனுசன் இவருன்னு..
எல்லாத்தையும் வாங்கிஅதை ஸ்கூட்டில ஏத்திக்கிட்டு மார்க்கேட்டுக்கு போனாரு அவரு. அவரு வழக்கமாக்குடுக்குற அந்த வயனான அம்மா அன்னிக்கிக் காணோம்.பக்கத்துல கடை போட்டருக்குரவுக ளுக்கும் ஒண்ணும் தெரியல
சரி இருக்குரவுகள்ள பொருத்தமான ஆளை அவர் கண்ணு தேடிச்சி. அப்ப எதுத்தாப்புல ரெண்டு அம்மாக்கள் நடைபாதையில கடை போட்டுருந்தாக. அதுல ஒரு அம்மா பாத்தாலே ரொம்பப்பாவமா இருந்துச்சு பழைய சேலை காது கழுத்துல ஒண்ணுமில்லாம வெறுமையா . அவங்கதான் சரியானவங்கன்னு தேர்ந்தெடுத்து… அவங்ககிட்டப்போயி அம்மா இந்தாங்க அரிசி பருப்பு சர்கரை பாமாயிலுன்னு எடுத்துக்குடுக்கபோனப்ப அந்த அம்மா சொல்லிச்சி. நாங்க வெலைக்கி வாங்குறதில்லங்கன்னு.
இவரு சொன்னாரு இல்லம்மா. வெலைக்கி இல்லதானமாத்தான்வாங்கிக்கங்கன்னாரு. அந்த அம்மாவுக்கு வந்துச்சே கோவம். “அய்யா நான் உங்ககிட்ட பிச்சை கேட்டனா.நான் ஒண்ணும் பிச்சக்காரியில்ல. வியாபாரம் பாக்க வந்துருக்கேன் . பிச்சையெடுக்குற அளவுக்கு என் உடம்பு மோசமாபோகலை கைகாலு நல்லாருக்கு. ஒழைச்சிப் பொழைக்கிற தைரியம் இருக்கு..என்ன விட முடியாதவங்க யாராவது இருப்பாங்க அவங்களுக்குக்கொண்டுபோய் குடுங்க
என்னால ஒழைக்க முடியும் அதுல கால்வயித்துக்கஞ்சினாலும் நிம்மதியா குடிக்கமுடியும் ஆண்டவன் அதைக்குடுத்துருக்கான் இன்னிக்கி வரை” நு சொன்னவன்ன அவருக்கு ஆடிப்போயிடுச்சு. அந்த அம்மாவையும் கடைல கேட்டவரையும் ஒப்பிட்டுப்பாக்காம இருக்க முடியல அவங்களை கையெடுத்துக் கும்புடத்தோணிச்சு. என்ன ஒரு சுய கெளவுரவம்….
அப்ப அந்த அம்மா சொல்லிச்சி அந்தா எதுத்தாப்புல ஒரு பெரியவர் இருக்காரு பாருங்க அய்யா அவர்கிட்ட க்குடுங்க . அவர்தான் ரொம்பமுடியாதவரு. இருந்தாலும் மல்லுக்கட்டி முடியாததோட கடை வச்சிருக்காரு. அவருக்குத்தான் ஆருமில்ல. பாவம்ன்னு சொல்லிச்சு
அவர்கிட்டகொண்டுபோய் குடுத்தப்ப அவருதயக்கத்தோட வாங்கிக்கிட்டாரு. அவரு வைச்சிருந்த அத்திக்காய் சுண்டக்காய் பைல போட்டுக்குடுத்தாரு
வேணாம்ன்னு சொன்னாலும் விடல. என்னோ அன்ப நன்றிய இப்புடித்தான் குடுக்கமுடியும். மறுக்காமக்கொண்டுபோய் சாப்புடுங்க ஒடம்புக்கு ரொம்ப நல்லதுன்னாரு . ஆனா இவரு 20 ரூவாய எடுத்துக்கைல குடுத்து பரவாயில்ல. உங்க மகன் குடுத்ததா இருக்கட்டும்ன்னு சொன்னவன்ன அவரு கண்ணு கலங்கிடுச்சு.
என்னாங்கய்யா கண்ணு கலங்குதுன்னு கேட்டப்ப அவரு சொன்னாரு. அவன் ஒரு ஆக்ஸிடெண்ட்டுல போயிட்டான். அவனோட மகன் மட்டுதான் அதுல மிச்சம் அவன் இப்ப என்கிட்டத்தான் இருக்கான்
அவனை நெனச்சவன்ன கண்ணு கலங்கிடுச்சுன்னாரு. இவரும் கண்ணத்தொடச்சிக்கிட்டாரு. அவனுக்கு ஏதாவது பண்ணலாம்ன்ற எண்ணத்தோட..




