Oplus_131072
தென் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட இந்த தாவரம் இன்று உலக நாடுகள் அனைத்திலும், உண்ணும் உணவில் ஒரு முக்கியமான இடத்தை பிடித்துள்ளது.
போர்த்துகீசியாவில் இருந்து இந்தியா வந்த வாஸ்கோ டி காமாவுடன் வந்த ஏசு சங்க பாதிரியார்கள் மூலம் இந்தப்பயிர் இந்தியர்களுக்கு அறிமுகப்படுத்தப் பட்டிருக்கலாம் என்று லேய்பேர்கர் (1928) குறிப்பிடுகிறார்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் தென் ஆற்காட்டில் இந்த பயிர் அதிகம் விளைவிக்கப்பட்டதால் அது கிழக்கு கடற்கரை வழியாய் பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து இந்தியா வந்ததாக கருதப்படுகிறது. பிலிப்பைன்ஸின் தலைநகரான மணிலாவின் பெயரால் நிலக்கடலை அழைக்கப் படுவதை நாம் அறிவோம் . இது வட்டார வழக்குகளில் வேர்க்கடலை, மணிலாக்கடலை, கடலைக்காய், மணிலாக்கொட்டை (மல்லாட்டை) எனப் பலவாறாக வழங்கப்படுகிறது.
இன்று உலக அளவில் வேர்க்கடலை உற்பத்தியில் முன்னனி நாடாக இந்தியா உள்ளது. ஏறத்தாழ எட்டு மில்லியன் ஹெக்டேர்களில் கடலை சாகுபடி செய்யப்படுகிறது.
முக்கியமாக ஆந்திரம், தமிழகம், குஜராத், கர்நாடகம், மற்றும் மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் கடலை சாகுபடி அதிகமாக உள்ளது.
பொதுவாக நிலக் கடலையின் பயன்கள்:
• நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.
• நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும்.
• நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்ஸிடண்டாகவும் திகழ்கிறது.
• இது இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது. நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்ஸிடண்டு உள்ளது. இது நோய் வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது.
• பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தை பேறு ஏற்படுவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பகக்கட்டி உண்டாவதையும் தடுக்கிறது.
• பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, விட்டமின்கள் நிலக்கடலையில் நிறைந்துள்ளன. இதன் காரணமாக பெண்களுக்கு கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.
• மூளை வளர்ச்சிக்கும், ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்கும் தன்மை கொண்டது.



