பண்புள்ள மனிதர்கள் என்றால் அடுத்தவரைப் பற்றியும் யோசிக்கும் மனிதர்கள் தானே..!! படித்ததில் பிடித்தது..!!

போன வருடம் எழுதியது…

 

நினைவுபடுத்திக்கொள்ள…

 

காலையிலேயே சட்டையை மாட்டிக்கொண்டு கிளம்பிக் கொண்டிருந்தார் அப்பா. வாண்டுகள் அப்போது தான் பள்ளிக்கு கிளம்பிச் சென்றதாலும் இன்றைக்கு வெள்ளிக்கிழமை என்ற நினைப்பினாலும் அப்படியே சற்று நேரம் அமர்ந்து அவரை தான் நோட்டமிட்டேன்.

 

“காசு கொடுப்பா…” என்று தாயிடம் தான் வந்தார்.

 

“நேத்து கொடுத்தது எங்க??” என்று தாய் விசாரிக்க எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. டாடி அந்தக் காலத்திலிருந்து சம்பளத்தை தாயிடம் தான் கொடுப்பார். நான் அப்படி பழகவில்லை என்பதால் சிரித்தபடி,

 

“என்னவாம்?? காலைலயே எங்க கிளம்பிட்டாரு கைலியோட??” என்று கேட்டேன்.

 

“முடி வெட்டப்போறாருடா…” என்றார் தாய்.

 

“அங்க என்ன இருக்குனு இப்போ வெட்டுறதுக்கு போறீங்க???” என்று கேட்க,

 

“தீவாளி வருதில்ல… அவனுக்கு தீவாளி காசு கொடுக்க வேண்டாமா???” என்றார்.

 

“நீங்க தீவாளியா கொண்டாடுவீங்க???” என்று கேட்க

 

“அவன் கொண்டாடுவான்ல…” என்றார் காசை வாங்கி சட்டைப்பையில் வைத்தபடி.

 

“ஓஹோ… இப்போ இந்த தீவாளி காசை கொடுக்க முடி வெட்ட போனும் என்ன???” என்று சிரித்தேன்.

 

“சும்மா கொடுத்தா எப்படி வாங்குவான்???” என்று எனக்கு பதில் கேள்வி.

 

“குப்பை வண்டி வருது… அவருக்கும் வாங்கிட்டு போங்க…” என்றேன்.

 

“அவனுக்கு இப்போ கொடுத்தா குடிச்சு தீத்துருவான்… தீவாளிக்கு முன்ன கொடுக்கிறேன்…” என்றபடி நடையைக் கட்டினார்.

 

புன்னகை தான் வந்தது. இது புதுப்பழக்கம், பகட்டு வாழ்க்கை பழக்கம் என்றெல்லாம் பழகிய பழக்கம் அல்ல. எனக்கு விவரம் தெரிய ஆரம்பித்த புதிதில் டாடிக்கு மாதம் 600ரூபாய் கிட்ட சம்பளம். அப்போதிருந்து இந்த பழக்கம் அவருக்கு உண்டு என்று எனக்குத் தெரியும். ஆனால் உண்மையில் அவருக்கு இந்த பழக்கம் எத்தனை ஆண்டுகளாய் இருக்கிறது என்று தெரியாது.

 

பால்காரர், பேப்பர் போடுபவர்,இஸ்திரி போடுபவர், கேபிள்காரர், முடிவெட்டும் சலூன், குப்பை எடுப்பவர், வீட்டில் வேலை செய்பவர், இன்னும் எனக்கு தெரியாத அவருக்கு எதாவது ஒரு வகையில் உதவியாக இருப்பவர்கள் எல்லோருக்கும் பண்டிகை காலம் என்றால் தனியாக காசு எடுத்து வைப்பார்.

 

தேதி முப்பதை தொட்டாலே கணக்கு பார்த்து பால் காசு, கேபிள் காசு எல்லாம் எடுத்து வைப்பவர். ஒரு ரெண்டு நாள் போனா தான் என்ன என்று நாம் திட்டினாலும், “உனக்கு ஒண்ணாம் தேதி சம்பளம் வரணும்னு நீ நினைக்குற மாதிரி தான மத்தவங்களுக்கும் இருக்கும்..” என்று சொல்லி வாயை அடைப்பார். அதனால் எனக்கும் மாதத்தின் முதல் தேதியிலேயே கொடுக்க வேண்டியவர்களுக்கு பணம் கொடுக்கும் பழக்கம் உண்டு.

 

ஆனால் பண்டிகை காசு என்று நான் வீட்டோடு முடித்துவிடுவேன். டாடி போல மெனக்கெட்டுப்போய் காசு கொடுத்ததில்லை. சந்தர்ப்பம் வாய்த்தாலோ போகும் போது வரும்போது வழியில் பார்த்தாலோ உண்டு ஆனால் இப்படி செய்ததில்லை.

 

இவரென்ன இத்தனை மெனக்கெடல் என்று யோசிக்க, அவரைப் பொறுத்துவரை அதுவும் ஒரு வகையான அன்பின் வெளிப்பாடு மட்டுமே…

 

பண்டிகை எல்லாம் எதற்கு வருகிறது??? நாம் மட்டும் கொண்டாடுவதற்கா பண்டிகைகள்??? நாம் சுற்றம் சூழ கொண்டாடி மகிழத்தானே பண்டிகைகள் எல்லாம் ஏற்படுத்தி வைத்திருக்கிறோம் என்று யோசித்தேன். நம்மளும் முடி வெட்டப் போவோம் என்று கிளம்பிவிட்டேன்.

 

கலாச்சாரம், நம்பிக்கை, மதம் என்று தன்னிடமிருந்து எதையும் டாடி எனக்கு கடத்தியதில்லை ஆனால் இப்படியான ஒழுக்கங்கள் பண்பாடுகளை தெரிந்தோ தெரியாமலோ விரும்பியோ வற்புறுத்தியோ என்னிடம் கடத்தியிருக்கிறார்.

 

நம்மளும் எழுதி வைப்போம்… எவருக்கும் கடத்தவில்லை, உணர்த்தவில்லை என்றால் கூட வாண்டுகள் வளர்ந்து படித்துக்கொள்ளட்டும் என்று எழுதுகிறேன்.

 

மேம்பட்ட மனிதர்கள் என்றால் பண்புள்ள மனிதர்கள் தானே…

 

பண்புள்ள மனிதர்கள் என்றால் அடுத்தவரைப் பற்றியும் யோசிக்கும் மனிதர்கள் தானே…

 

அன்பு செய்வோம்! பண்டிகைகள் கொண்டாடுவோம்!!

Read Previous

எல்லோருக்கும் விடுமுறையாம் அம்மாக்களுக்கு விடுமுறையே கிடையாது..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

ஆபாச வீடியோ அனுப்பி பணம் பறித்த பெண் கைது..!! போலீஸ் விசாரணை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular