மீண்டும் இன்னொரு வாடகை
வீட்டிற்கு மாறிப் போவது என்பது கொடுமை .
பல கஷ்டங்கள்,
பல அவமானங்கள்
அதில் இருக்கிறது..
பெரும்பாலும் அட்வான்ஸ் கொடுக்க பணம் இருக்காது. பொருள்கள் ஏற்றி இறக்க ஆட்களின் கூலி, போக்குவரத்துச் செலவு, புது வீட்டிற்கு போனதும் புதிதாக சில பொருள்களை கட்டாயம் வாங்க வேண்டும் என்ற செலவுகள் என பல சிக்கல்கள் முளைக்கும்..
பொதுவாகவே மனிதர்களின் மனங்கள் புது இடத்திற்கு மாறுவதை ஏற்றுக் கொள்ளாது.
வேறு வீட்டிற்கு வந்த பிறகும் மனதில் ஏதோ இனம்புரியாத கவலை இருப்பது போலவே இருக்கும்..
தூக்கம் வராது..
குழந்தைகளுக்கு புது நட்புகள் இருக்காது. விளையாடுவதற்கு இடம் இருக்காது..
வீட்டு உரிமையாளரை நினைத்து பயம் வரும்..வீட்டில் சிறு சத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் எனத் தோன்றும்..
இந்த வீட்டிலிருந்தாவது ஒரு நல்ல நிலைமைக்கு வந்து விட மாட்டோமா என்ற ஏக்கம் வந்து போகும். பழைய வீடடில் நடந்த மனக்கசப்புகள் இங்கே வந்துவிடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை உணர்வு இருக்கும்.
புது வீட்டின் உரிமையாளருடன், அக்கம்பக்கத்தினருடன் பழக கொஞ்சம் கூச்சமாக இருக்கும். சொந்த வீடு இல்லையா எனக் கேட்பார்கள்.
ஜாதி என்ன எனக் கேட்பார்கள்…
அடுத்து ரேஷன் கடை மாற்றம், ஆதார் கார்டில் முகவரி மாற்றம், கேபிள் கனெக்ஷனுக்கு அலைச்சல்கள் என்று முதல் ஒரு வாரம் வேலைகள் படுத்தி எடுக்கும்…
இவ்வளவையும் தாண்டி நடுத்தர மக்கள் வாடகை வீட்டிலேயே வாழ்ந்துதான் ஆக வேண்டும்.
எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல்
சுதந்திரமாக,உரிமையாக தன் சொந்த வீட்டில்
இருக்க வேண்டும், நடமாட வேண்டு்ம்,
உறங்க வேண்டும் என்பது தான் அவர்களின் வாழ்நாள் கனவு..




