தென் அமெரிக்க நாடான பெருவின் ஜுனின் (Junín) பிராந்தியத்தில் சனிக்கிழமை இரவு அடுத்தடுத்து ஏற்பட்ட 5.1 மற்றும் 3.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்கள் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.
இந்த நிலநடுக்கத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், 21 பேர் காயமடைந்துள்ளனர். களிமண் செங்கற்களால் கட்டப்பட்ட 48 வீடுகள் முழுமையாக இடிந்து விழுந்துள்ளன. மேலும், 18 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதால் 300-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிலநடுக்கத்தால் இடிந்த கட்டிடங்களின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் அவசரக்கால மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.




