என் மகள் பிறந்து இரண்டாவது நாள்தான் அவளுடைய அம்மா இறந்து போனாள். ரத்தம் வாடை போகாத என் மகளை கையில் ஏந்தியபடி அவளுடைய அம்மாவின் சிதைக்கு நெருப்பு வைக்கும்போது என் கைகள் நடுங்கின, என் கண்கள் முன் எப்போதும் இல்லாதவாறு சிவந்து கலங்கி இருந்தன.
அவள் மரணம் எனக்குள் ஏற்படுத்திய அதிர்ச்சியில் இருந்து நான் மீண்டதற்கான முக்கிய காரணம் என் மகள்தான்.
இரவில் அவள் பால் குடிக்க அழுவாள். புட்டிப்பால் கலந்து கொடுத்ததை கோபத்தில் துப்பிவிட்டு பாட்டியின் கையில் படுத்து அழாமல் இருந்த அவளை நான் போய் எடுத்ததும் அழுகையை நிறுத்துவாள்.
என் நெஞ்சின் கனலை உணர்ந்ததாலோ என்னவோ அவள் அழுகையை நிறுத்தினாள்? இல்லை நான் அவளுடைய அப்பா என்று அவள் உணர்ந்ததாலோ?
எலிக்குஞ்சைப் போல் இருந்த அவளை கவனமாக கையில் ஏந்தி தூங்க வைக்க நான் நடந்தபோது தூங்காமல் கண் விழித்து அவள் என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தது ஏன்?
எனக்கு தெரிந்த பாடல்களையெல்லாம் தாலாட்டாக நான் பாடும்போது அதை கேட்டு அவள் தூங்குவதற்காக இருந்ததா?
அவளுடைய ஒவ்வொரு சிரிப்பும் எனக்கு முன்னேறிச் செல்ல ஊக்கமாய் இருந்ததல்லவா?
மறுமணம் செய்ய பலர் சொன்னபோதும் எல்லாவற்றையும் நான் எதிர்த்தது ஏன்? அவளுக்காக உள்ள என் அன்பை பகிர்ந்து கொடுக்க எனக்கு இருந்த தயக்கத்தினால்தானே?
அவள் எவ்வளவு சீக்கிரம் கவிழ்ந்து விழுந்தாள், முட்டி போட்டு தவழ ஆரம்பித்தாள். கண்ணில் கண்டதையெல்லாம் எடுத்து வாயில் போடும்போது நான் பயந்தது ஏன்?
முதலில் வந்த அவளுடைய சின்ன பற்கள் என் தோளில் அழுந்த கடித்தபோது வலியை பொறுத்துக்கொண்டு நான் பேசாமல் இருந்தது ஏன்?
வேலை முடிந்து நான் வரும்போது முட்டி போட்டு தவழ்ந்து அவள் வேகமாக வரும்போது அவளருகில் நான் பதறி ஓடியது ஏன்?
ஒரு நாள் குருணை கொடுக்கும்போது “ச்சா” என்று அவள்தான் முதன்முதலில் கூப்பிட்டபோது ஏன் என் கண்கள் கலங்கின? ஏன் நான் அவளை வாரி எடுத்து முத்தம் கொடுத்தேன்?
என் மடியில் இருந்தவள் சிறுநீர் கழித்தபோதும், மலம் கழித்தபோதும் எனக்கு ஏன் அருவருப்பு தோன்றவில்லை?
என் செருப்பை போட்டு அவள் முற்றத்தில் தத்தித் தத்தி நடந்தபோது நான் ஏன் சந்தோஷப்பட்டேன்?
முதல் முறையாக அவளை பாலர் பள்ளியில் கொண்டு விட்டபோது அப்பாவோடுதான் வருவேன் என்று சொல்லி அவள் உரக்க அழுதபோது ஏன் நானும் அவளுடன் சேர்ந்து அழுதேன்? அதை பார்த்து என் சுற்றியிருந்தவர்கள் ஏன் சிரித்தார்கள்?
பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் யாரைப்போல் ஆக வேண்டும் என்று டீச்சர் கேட்டபோது எனக்கு என் அப்பாவை போல் ஆனால் போதும் என்று அவள் சொன்னதை கேட்டு நான் ஏன் புன்னகைத்தேன்?
சமையலறையில் காய்கறி வெட்டும்போது அப்பா நீங்கள் ஒதுங்கி நில்லுங்கள் இனி எல்லாமே நான் செய்து கொள்கிறேன் என்று சொல்லிக்கொண்டு அவள் சமையலறையை ஆக்கிரமித்தபோது நான் ஏன் திகைத்து நின்றேன்?
ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது ஸ்கூல் விட்டு வந்ததும் அப்பா எனக்கு முதன் முதலாக பீரியட்ஸ் ஆயிற்று என்று அவள் நாணத்துடன் சொன்னபோது நான் ஏன் திகைத்து நின்றேன்? ஏன் நான் அவளை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தேன்?
முதல் முறையாக அவள் புடவை கட்டி என் அருகில் வந்து நின்றபோது நான் ஏன் ஆச்சரியப்பட்டேன்?
ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மதிப்பெண் வாங்கி ட்ராபியுடன் அவள் ஓடி வரும்போது நான் ஏன் பெருமைப்பட்டேன்?
திருமண வயதை அடைந்ததும் மேட்ரிமோனி தளத்தில் அவள் பெயரை பதிவு செய்வதோடு என் பெயரையும் பதிவு செய்திருப்பதை பார்த்து நான் ஏன் ஆச்சரியப்பட்டேன்?
என் கல்யாணத்தன்று அப்பாவின் கல்யாணமும் நடக்க வேண்டும் என்று அவள் அடம்பிடித்ததை பார்த்து நான் ஏன் அவளை திட்டினேன்?
நீண்ட வாக்குவாதத்திற்கு பிறகு எங்கள் குலதெய்வ கோவிலுக்கு அருகில் இருந்த திருமண பந்தலில் நிறைந்த சபையின் முன் அவளை சுமங்கலியாக்கிய பிறகு அதே பந்தலில் யாரும் இல்லாத பவானியின் கைகளை என் கைகளில் சேர்த்து கொடுத்தபோது ஏன் என் கண்கள் கலங்கின?
கடைசியாக என்னிடம் விடைபெற்று பவானியின் கையில் ஒரு குறிப்பை கொடுத்து கண்ணீர் மல்க என் மகளை பார்த்து நான் ஏன் விக்கித்து அழுதேன்?
நான் அழுவதை பார்த்து என் கையை இறுக பிடித்த பவானியின் கையில் இருந்த குறிப்பில் “அப்பாவை பார்த்துக்கொள்ள வேண்டும், நேசிக்க மட்டும் தெரிந்த ஒரு அப்பா அவர், அப்பாவிற்கு கொடுக்க வேண்டிய மருந்துகளின் விவரம் கதவின் பின்னால் ஒட்டி வைத்திருக்கிறேன் எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்ய வேண்டும். இனி அம்மாதான் அந்த வீட்டில் விளக்கு. எப்போதும் என் அப்பாவிற்கு துணையாக அம்மா இருக்க வேண்டும். ஒருவரை ஒருவர் நேசித்து நீங்கள் நிறைய காலம் வாழ வேண்டும்” என்று அவள் எழுதியிருந்ததை கண்ணீரோடு திக்கி திக்கி படிக்கும்போது நான் உணர்ந்தேன் மகளே உனக்கு அப்பாவின் மீதுள்ள அன்பையும் அக்கறையையும். இந்த அப்பா பாக்கியவான், கடவுள் எனக்காக கொடுத்த வரம் நீ.
ஈரமான கண்களோடு என் முகத்தை பார்த்து பேச முடியாமல் நிற்கும் பவானியின் கைகளை இறுக பிடித்துக்கொண்டு நான் மனதிற்குள் சொன்னேன் எனக்கு தெரியும் மகளே உன் அக்கறை. நீ போனால் அப்பா தனியாகி விடுவார் என்று உனக்கு தெரியும். நான் ஒருபோதும் தனித்து விடக்கூடாது என்று நீ ஆசைப்பட்டிருப்பாய் ஆனால் யார் எனக்கு துணையாக வந்தாலும் அது உனக்கு ஈடாகுமா மகளே?
குறிப்பு: பெற்றோரை அடையாளம் காணும் பிள்ளைகள் கிடைப்பதும், பிள்ளைகளை நேசிக்கும் பெற்றோர்கள் கிடைப்பதும் ஒரு புண்ணியம்.




