மூத்தோர்சொல் வார்த்தையும் முழுநெல்லிக்காயும் முன்னே கசக்கும் பின்னே இனிக்கும்.. என்பதை உணர்த்திய பதிவு..!!

Oplus_131072

அப்பத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்

கரியையும் சாம்பல்தூளையும்
கொடுத்து பல் விளக்கச் சொன்ன போது
பட்டிக்காடு என இளித்த பற்கள்
இன்று வேரற்று போனபோது
ஓடி நின்றேன் சர்வோதயா காதிகிராப்ட் என பல்பொடி வாங்க
அப்பத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்……

வெந்தயமும் சீகைக்காயும்
வடிதண்ணீரில் அரைத்து தேய்த்துக் குளி
என்றபோது பித்துக்குளிகள் என
எள்ளி நகையாடி சிக் ஷாம்புவை
சிக்கென பிடித்து இன்று வெண்கேசம்
வந்தபின்பு ஓடுகின்றேன்
சீகைக்காய் வாங்க
அப்பத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்……

பாசிப்பயறோ கடலைமாவோ
அரைத்துக்குளி என்ற போது
லிரில் லக்ஸ் சினிமா நட்சத்திரங்களின்
அழகு சோப் என அத்தரித்திரங்கள்
கைகாட்டிய கட்டிகளை எல்லாம்
போட்டு தோளல் சுருங்கி
வயோதிகம் தெரிந்த பின்பு
ஓடுகின்றேன் பயத்தமாவு அரைக்க
அப்பத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்……

இருமலோ தும்மலோ வந்த போது
துளசி தூதுவளை சுக்கு மிளகு
போட்டு கசாயம் தந்த போது
முகத்தை சுளித்து காஃப் சிரப்
குடித்து தைராய்டு வரை சென்ற பின்பு
ஓடுகின்றேன் துளசி தூதுவளை
செடி வளர்க்க
அப்பத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்……

வயிறு வலி என்ற போது
வெறும் வயிற்றில் வெந்தயக்களியோ
கற்றாழைச்சாறோ கொண்டு வந்து
தந்த போது தூக்கி எறிந்து சீறி
ப்ருபன்னும் பெயின்கில்லரும் போட்டு
கருப்பை பழுதடைந்த பின்பு
ஓடுகின்றேன் கற்றாழை வளர்க்க
அப்பத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்……

நல்லெண்ணெய் செக்கில் ஆட்டி
மணமாய் தந்தபோது
சன்பிளவர் ஆயில் பார்
முகம் காட்டும் தூய்மை
எனக்கூறி முகத்தில் அறைய
பதிலுரைத்துவிட்டு இன்று
வாய்க்கு விளங்காத வாசமே இல்லாத
வாழ்வு வந்த பின்பு
செக்கு நோக்கி ஓடுகின்றேன்
அப்பத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்……

மண்பானை சமையல்
மண்பானை குளிர் நீரை எல்லாம்
மாற்றி விட்டு ஆர்ஓ வாட்டர்
என புழு பூச்சி கூட வாழத்தகுதி
அற்ற நீரைக்குடித்து குடித்து
சவமான பின்பு ஓடுகின்றேன்
மண்பானை வாங்க
அப்பத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்…….

படித்த தலைமுறை எனும்
நாகரீகத்தில் திளைத்து
குருகுலக் கல்வியை
கோடிக்கணக்கான ரூபாய்
கல்வியாக்கி கொல்லைத்துளசி
வைத்தியம் மறந்து மாடி மாடியாய்
குளிரூட்டப்பட்ட அறையில் லட்ச
லட்சமாய்க் கொட்டி பிணமாகவும்
வாழ்வில் ஏது சுதந்திரம்
ஏது சுகாதாரம் என்று
எங்கோ இருந்து
அப்பத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்.

Read Previous

மாமியார் உடைத்தால் மண் குடம் ; மருமகள் உடைத்தால் பொன் குடம்.. பழமொழியின் அர்த்தம் தெரியுமா..??

Read Next

தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular