4 மாதங்களாக சம்பளம் இல்லை.. நிதி நெருக்கடியில் சிக்கிய ஊர்க்காவல் படை வீரர்கள்: தற்கொலை முயற்சியால் அதிர்ச்சி..!!

மக்களின் பாதுகாப்பிற்காக இரவு பகலாக பணியாற்றும் ஜார்க்கண்ட் மாநில ஊர்க்காவல் படை வீரர்கள், கடந்த நான்கு மாதங்களாக சம்பளம் கிடைக்காமல் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளனர். இதன் காரணமாக சில வீரர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்டில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் 135 ஊர்க்காவல் படை வீரர்களின் வாழ்வாதாரம் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. சம்பளம் இல்லாததால் குடும்பச் செலவுகள், குழந்தைகளின் கல்விக் கட்டணம் மற்றும் மருத்துவச் செலவுகளை சமாளிக்க முடியாமல், பலர் வட்டிக்குக் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 10 நாட்களில் மட்டும் இரண்டு பெண் ஊர்க்காவல் படை வீரர்கள் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளான சம்பவங்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஜூலை 8-ஆம் தேதி அலாவுதீன் மஹாலி என்ற பெண் காவலர், பல மாதங்களாக சம்பளம் கிடைக்காததால் தனது குடும்பம் எதிர்கொள்ளும் சிரமங்களையும், நோய்வாய்ப்பட்ட தாய்க்கு மருந்து வாங்க முடியாத நிலையையும் நினைத்து மனமுடைந்து, பணியில் இருந்தபோதே மருத்துவமனை வளாகத்தில் பினாயில் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

உடனடியாக சக ஊழியர்கள் அவரை மீட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்ததால் அவர் உயிர் தப்பினார்.

இந்த சம்பவம் நடந்த சில நாட்களிலேயே, மற்றொரு பெண் காவலரான புல்குமாரி ஹெம்ப்ராம், கடுமையான வயிற்று வலிக்கு கூட மருந்து வாங்க பணம் இல்லாததால் மருத்துவமனை வளாகத்தில் கண்ணீர் மல்க தனது வேதனையை வெளிப்படுத்தினார். “எனக்கு பணம் கொடுங்கள், இல்லையென்றால் நான் உயிரை மாய்த்துக் கொள்வேன்” என அவர் கதறியது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இதையடுத்து, மருத்துவக் கல்லூரி முதல்வர் பாதிக்கப்பட்ட பெண் காவலரை நேரில் சந்தித்து தனது சொந்த பணத்தில் இருந்து உடனடி நிதியுதவி வழங்கினார்.

ஊதியத் தாமதம் குறித்து விளக்கம் அளித்த மருத்துவக் கல்லூரி நிர்வாகம், ஊர்க்காவல் படை வீரர்களின் சம்பள பாக்கியை வழங்குவதற்காக ஏற்கனவே சம்பந்தப்பட்ட துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், தலைமை அலுவலகத்திலிருந்து நிதி ஒதுக்கீடு வராததே தாமதத்திற்கான காரணம் என்றும் தெரிவித்துள்ளது.

மக்களின் பாதுகாப்பில் ஈடுபடும் வீரர்களின் அடிப்படை தேவைகளுக்கே பணமின்றி தவிக்கும் நிலை, அரசு நிர்வாகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Read Previous

உலகக்கோப்பை இறுதிப் போட்டியை காணும் ரசிகர்களுக்கு அதிர்ச்சி..!! மைதான உணவுகளின் விலை பல மடங்கு உயர்வு..!!

Read Next

கோவில் பண்டிகை பேனரில் திரிஷா சாமி வேடம்.. சர்ச்சையைத் தொடர்ந்து படம் மாற்றம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular