எதிர்கால தொலைத்தொடர்பு உலகை வடிவமைக்கும் 6ஜி (6G) தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை விரைவுபடுத்தவும், அதன் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்யவும் அமெரிக்கா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாடுகள் முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் அடுத்த 12 மாதங்களுக்குள் கணிசமான முன்னேற்றத்தை எட்டும் வகையில், நாடுகளுக்கு இடையிலான ஆராய்ச்சி ஒத்துழைப்பு, தொழில்நுட்ப தகவல் பரிமாற்றம் மற்றும் சர்வதேச ஒருங்கிணைப்பை வலுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
தற்போது பயன்பாட்டில் உள்ள 5ஜி தொழில்நுட்பத்தை விட அதிக வேகம், குறைந்த தாமதம், மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் புதிய பொருளாதார வாய்ப்புகளை வழங்கும் தொழில்நுட்பமாக 6ஜி கருதப்படுகிறது. இதற்கான உலகளாவிய தரநிலைகள் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளை உருவாக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
6ஜி தொழில்நுட்பம் முழுமையாக நடைமுறைக்கு வந்தால், செயற்கை நுண்ணறிவு, தானியங்கி வாகனங்கள், ஸ்மார்ட் நகரங்கள், மருத்துவம் மற்றும் தொழில்துறை உள்ளிட்ட பல துறைகளில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.




