Oplus_131072
ஒரு செல்வந்தர் ஒரு காட்டு வழியா போய்க் கிட்டிருந்தார். வழிப்பறி பண்ற திருடர்கள் மூணுபேர் பார்த்துடறாங்க.. சும்மா விடுவாங்களா? ஓடி வந்து சுத்தி நின்னுகிட்டாங்க.
“என்ன வச்சிருக்கே…மரியாதையா எடுத்துக் குடுத்துடு”ன்னு மிரட்டினாங்க. இவருக்கு உசிருதானே பெரிசு… அதனாலே இருக்கறதையெல்லாம் எடுத்துக் குடுத்துட்டார். அவங்களும் எல்லாத்தையும் பறிச்சிக்கிட்டாங்க.
சரி, நாம ஓடிப்போயிடலாம்னு புறப்படற நேரம் அந்த மூணு திருடன்லே ஒருத்தன் யோசிக்க ஆரம்பிச்சான். “இவனை உயிரோட விட்டு வைக்கறதுனாலே என்ன லாபம்?” அப்படின்னு சொல்லிக்கிட்டே கத்தியைக் கையிலே எடுத்தான். அந்த ஆளை வெட்டப் போனான்.
இன்னொரு திருடன் அதைப் பார்த்தான் இவனைத் தடுத்து நிறுத்தினான். ”வேணாம்ப்பா.. இவனைக் கொன்னுடறதாலே மட்டும் நமக்கு என்ன லாபம்? இவனோட கையைக் காலை வேணும்னா கட்டி இங்கேயே போட்டுட்டுப் போயிடுவோம்” ன்னான்.
அதுவும் சரிதான்னு தோணிச்சி.. மூணுபேரும் சேர்ந்து அந்த ஆளு கையையும் காலையும் ஒரு கயித்தால சேர்த்து நல்லா இறுக்கிக் கட்டினாங்க. அதுக்கப்புறம் சாலை ஓரமா அந்த ஆளைத் தூக்கிப் போட்டுட்டுப் போயிட்டாங்க.
கொஞ்ச நேரம் ஆச்சு….
மூணாவது திருடன் மறுபடியும் அதே இடத்துக்குத் திரும்பி வந்தான். சாலை ஓரமா கிடந்த அந்த ஆளைப் பார்த்தான். இரக்கப்பட்டான்.
”ஐயோ பாவம்.. உனக்கு வலிக்குதா”ன்னு கேட்டான். ”கொஞ்சம் இரு … இந்தக் கட்டையெல்லாம் அவிழ்த்துவிடறேன்”னு சொல்லிக்கிட்டே கட்டுகளை 5 அவிழ்த்து விட்டான். அதுக்கப்புறம் “என்னோட வா.. உனக்கு வழி காட்டறேன்”னு சொல்லி அழைச்சிக்கிட்டுப் போனான்.
“அதோ தெரியுது பார் உன்னோட வீடு.. போய்ச்சேரு” ன்னு சொல்லிப்புட்டுக் கையைக் காட்டினான்.
அந்த ஆளு சொன்னார்; “ஐயா நீங்க எனக்கு பெரிய உபகாரத்தை பண்ணியிருக்கீங்க. நீங்களும் என் வீட்டுக்கு வந்துட்டுப் போங்களேன். எல்லாரும் சந்தோஷப்படுவாங்க”ன்னு சொல்லி கூப்பிட்டார்.
அதுக்குத் திருடன்,
“நீ சொல்ற மாதிரி நான் வர்றதுக்கு இல்லே.. வரக் கூடிய தகுதியும் எனக்கு இல்லே.. வந்தா காவலர்கள் என்னைப் பிடிச்சுக்குவாங்க”ன்னு சொல்லி இவரை அனுப்பிவச்சிட்டு பழையபடியே காட்டுக்குள்ளே போய் மறைஞ்சுட்டான்.
ஸ்ரீ ராமகிருஷ்ணர் சொன்ன கதை இது. எதுக்காக இதைச் சொன்னார்?.
இந்த உலக வாழ்க்கை ஒரு காடு மாதிரி… இந்தக் காட்டுலே மூணு திருடர்கள் இருக்காங்க… அவங்க யார் தெரியுமா?
சத்துவ குணம் – ரஜோ குணம் – தமோ குணம் இவங்கதான் அந்தத் திருடர்கள்.
ஜீவாத்மாவாகிய மனுஷன் காட்டு வழியா போறான். அவன்கிட்டே இருக்கிற பொருள் என்ன?
புனிதம் நிறைந்த ஆத்ம ஞானம். ரொம்ப விலை உயர்ந்த பொருள்.
அதை இந்த மூணு திருடர்களும் வழிப்பறி பண்றாங்க.
தமோ குணம் தான் முதல் திருடன். அவனை ஒரே அடியா அழிச்சுடறதுக்கு முயற்சி பண்ணுது.
ரஜோ குணம் ஒருத்தனை லெளகீத்துலே பிணைக்குது. அதனாலே ஆசைகள் வளருது. பந்தங்கள்ங்கற சங்கிலியாலே அவனைக் கட்டுப்படுத்துது.
இந்த மூணு திருடர்களும் நமக்குள்ளேயே இருக்கிறாங்க. சத்துவகுணம் – என்ன பண்ணுது?
உலக பந்தங்கள்லே யிருந்தும் -ரஜோதமோ குணங்களின் கொடுமைான உடும்புப் பிடிக்குள்ளேயிருந்தும் ஒருத்தனைக் காப்பாத்துது. இருந்தாலும் சத்துவ குணமும் ஒரு திருடன்தான்.
அதுவே நம்மை கடவுள்கிட்டே அழைச்சிக்கிட்டுப் போயிடாது. “அதோ பார் உன்னோட வீடு போய்ச்சேர்!”ன்னு கையைக் காட்டிட்டுப் போயிடும்.
சத்துவ குணம் உயர்ந்தது தான். இருந்தாலும் அதைவிடப் பெரிய நிலை ஒண்ணு உண்டு. அது இறைமயமாகவே ஆகிவிடற ஞானியின் நிலை.
மூன்று குணத்தையும் கடந்து போனாத்தான் ஒருத்தன் பிரம்ம ஞானத்தை அடைய முடியும். இதுதான் ஸ்ரீராம கிருஷ்ணருடைய கருத்து.




