சுயநலமும் அவசரமும் நிறைந்த இன்றைய காலகட்டத்தில், முன்பின் தெரியாத ஒரு குழந்தையின் நலனை நினைத்து டெலிவரி ஊழியர் ஒருவர் காட்டிய மனிதாபிமானம் சமூக வலைதளங்களில் பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது.
பெங்களூருவைச் சேர்ந்த நிவேதிதா ராய் என்ற தாய், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்த நெகிழ்ச்சியான சம்பவம் தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
தனது குழந்தைக்குத் தேவையான டயப்பர்களை பகல் நேரத்தில் வாங்க மறந்துவிட்டதை இரவில் உணர்ந்த நிவேதிதா, அவசரமாக இரவு 10 மணியளவில் பிளிப்கார்ட் நிமிடங்கள் மூலம் ஆர்டர் செய்துள்ளார்.
அதன்படி, இரவு 10.30 மணிக்கு டெலிவரி ஊழியர் பார்சலுடன் அவரது வீட்டிற்கு வந்துள்ளார். ஆனால், வழக்கமாக செய்வது போல வாசலில் இருந்த காலிங் பெல்லை அவர் அழுத்தவில்லை. அதற்கு பதிலாக, நிவேதிதாவின் செல்போன் எண்ணுக்கு அழைத்து, “மேடம், தயவுசெய்து வெளியே வந்து கதவைத் திறக்க முடியுமா?” என்று மென்மையாகக் கேட்டுள்ளார்.
இதனால் ஆச்சரியமடைந்த நிவேதிதா, “ஏன் காலிங் பெல் அடிக்கவில்லை?” என்று கேட்டுள்ளார்.
அதற்கு அந்த ஊழியர், “ஆர்டரில் டயப்பர் இருப்பதைப் பார்த்தேன். வீட்டில் சிறிய குழந்தை இருக்கும் என்று நினைத்தேன். இந்த நேரத்தில் குழந்தை தூங்கிக் கொண்டிருக்கலாம். நான் பெல் அடித்தால் குழந்தையின் தூக்கம் கலைந்துவிடும் என்பதால் தான் உங்களுக்கு போன் செய்தேன்” என்று தெரிவித்துள்ளார்.
ஒரு குழந்தையின் அமைதியான தூக்கத்தைப் பற்றி யோசித்த அந்த ஊழியரின் அக்கறை தன்னை நெகிழ வைத்ததாக நிவேதிதா தெரிவித்துள்ளார்.
“இந்த அவசரமான உலகில், முன்பின் தெரியாத ஒருவர் கூட என் குழந்தையைப் பற்றி ஒரு கணம் சிந்தித்திருக்கிறார். இதுபோன்ற சிறிய கருணைச் செயல்கள்தான் வாழ்க்கையில் நீண்ட காலம் நினைவில் நிற்கும்” என அவர் பதிவிட்டுள்ளார்.
இந்த சம்பவத்தைப் பார்த்த பலரும், “தூங்கும் குழந்தையின் மதிப்பு பெற்றோருக்கு மட்டுமே தெரியும்”, “அந்த டெலிவரி ஊழியரின் மனிதநேயம் பாராட்டுக்குரியது” என்று தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram




