இங்கிலாந்தில் ஆன்லைன் மூலம் பாலியல் சேவை வழங்குவதாக விளம்பரம் செய்து, வாடிக்கையாளர்களின் வீடுகளுக்குச் சென்று மயக்க மருந்து கொடுத்து பணம், நகைகளை கொள்ளையடித்த ரோமானிய தம்பதிக்கு நீதிமன்றம் தலா 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
ரோமானியாவைச் சேர்ந்த அதினா மிஹாய் (31), அவரது காதலர் மேடலின் துமித்ரு (30) ஆகியோர் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்குச் சென்று கொள்ளையடித்துள்ளனர். அதினா மதுவில் சக்திவாய்ந்த ரசாயனத்தை கலந்து கொடுத்து, வாடிக்கையாளர்கள் மயங்கியதும் துமித்ருவை வரவழைத்து பணம், தங்கம், ரோலக்ஸ் கடிகாரங்கள் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் சிக்கிய 4 பேரில் ஆக்ஸ்போர்டுஷைரைச் சேர்ந்த கேரி மவுவாத் (37), கிளவுசெஸ்டர்ஷைரைச் சேர்ந்த மால்கல்ம் கிங் (80) ஆகிய இருவர் உயிரிழந்தனர். மேலும் இருவர் உயிர் தப்பினர்.
பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் இருந்த மதுபானக் குவளைகளில் பதிவான கைரேகைகள் மூலம் விசாரணை நடத்திய போலீசார், அதினா மற்றும் துமித்ருவை கைது செய்தனர். குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து இருவருக்கும் தலா 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.




