சென்னையில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.250ஐ தாண்டியது.. பூண்டு விலையும் கிடுகிடு உயர்வு!

சென்னை கோயம்பேடு மொத்த விற்பனைச் சந்தையில் சின்ன வெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தற்போது மொத்த விற்பனைச் சந்தையிலேயே ஒரு கிலோ சின்ன வெங்காயம் அதிகபட்சமாக ரூ.220 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக சில்லறை விற்பனைக் கடைகளில் அதன் விலை ரூ.250ஐக் கடந்துள்ளது. அன்றாட சமையலில் முக்கியமாகப் பயன்படுத்தப்படும் சின்ன வெங்காயத்தின் விலை இந்த அளவுக்கு உயர்ந்திருப்பது குடும்பங்களின் செலவினத்தில் கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது.
சின்ன வெங்காயத்தின் விலை உயர்வைத் தொடர்ந்து பூண்டின் விலையும் அதிகமாக உள்ளது. கோயம்பேடு சந்தை மற்றும் சில்லறை விற்பனைக் கடைகளில் பூண்டு ஒரு கிலோ ரூ.230 முதல் ரூ.320 வரை விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் ஒரே நேரத்தில் இரண்டு அத்தியாவசிய சமையல் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது.
ஏற்கெனவே அன்றாட மளிகைப் பொருட்களை வாங்குவதற்கு அதிக செலவு செய்ய வேண்டிய நிலையில், சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு விலையேற்றம் இல்லத்தரசிகளையும் பொதுமக்களையும் கவலையடையச் செய்துள்ளது. சமையலுக்குத் தவிர்க்க முடியாத இந்தப் பொருட்களின் விலை உயர்வு குடும்பங்களின் மாதாந்திர பட்ஜெட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.




கருத்துகள் (0)