பெண்ணிடம் செல்போன் மூலம் அத்துமீறல் புகார்.. காவல் உதவி ஆய்வாளர் நிரந்தர பணிநீக்கம்!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பெண் ஒருவரிடம் செல்போன் மற்றும் வாட்ஸ்ஆப் வாயிலாக தவறான முறையில் தொடர்புகொண்டு அத்துமீறலில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுக்கு உள்ளான காவல் உதவி ஆய்வாளர் ராஜகோபால் நிரந்தரமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். காவல்துறையில் பணியாற்றிய அதிகாரி மீது எழுந்த இந்தப் புகார் தொடர்பாக ஏற்கனவே துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
புகார் அளிப்பதற்காக காவல் நிலையத்தை அணுகிய பெண்ணிடம், காவல் உதவி ஆய்வாளர் ராஜகோபால் வாட்ஸ்ஆப் செய்திகள் மற்றும் செல்போன் அழைப்புகள் மூலமாக முறையற்ற வகையில் நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும், அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து காவல்துறை அதிகாரிகள் விரிவான துறை ரீதியான விசாரணையை மேற்கொண்டு வந்தனர்.
இந்த விசாரணையின் முடிவில் ராஜகோபால் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவரை காவல்துறைப் பணியிலிருந்து நிரந்தரமாக நீக்கி தென் மண்டல காவல்துறைத் தலைவர் (ஐ.ஜி) உத்தரவு பிறப்பித்துள்ளார். பணியிடை நீக்கத்தில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் மீதான விசாரணை முடிவடைந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.




கருத்துகள் (0)