சிவகாசியில் அதிமுக நிர்வாகி பீர் பாட்டிலால் குத்திக் கொலை! சமரசம் பேச அழைத்துச் சென்று அரங்கேறிய பயங்கரம்!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே அதிமுக தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகி ஒருவர் பீர் பாட்டிலால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலை தொடர்பாகத் தப்பியோடிய நபர்களைப் பிடிக்க போலீசார் தீவிரமாகத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
சிவகாசி வடபட்டி பகுதியைச் சேர்ந்த ராஜாகனி (28), அதிமுக ஒன்றிய தொழில்நுட்பப் பிரிவின் துணைச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்தார். இவருக்கும் சிலருக்கும் இடையே கோயில் திருவிழாவின்போது ஏற்பட்ட முன்விரோதம் காரணமாகப் பிரச்சினை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பழைய தகராறை மறந்து சமரசம் செய்துகொள்ளலாம் என்று கூறி வீரசிங்கம் மற்றும் அவரது நண்பர்கள் ராஜாகனியை அழைத்துச் சென்றதாகத் தெரிகிறது. அப்போது ஏற்பட்ட சம்பவத்தில், அவரை பீர் பாட்டிலால் சரமாரியாகக் குத்திக் கொலை செய்துவிட்டு அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பியோடியதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மேலும், கொலையில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் வீரசிங்கம் மற்றும் அவருடன் சென்ற நபர்களைப் பிடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கோயில் திருவிழாவில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.




கருத்துகள் (0)