இன்று முதல் ஸ்மார்ட்போன்கள் விலை உயர்வு: சாம்சங், சியோமி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி!

இந்தியாவில் ஸ்மார்ட்போன் வாங்கத் திட்டமிட்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் செலவு ஏற்படும் வகையில், முன்னணி நிறுவனங்களான சாம்சங் மற்றும் சியோமி தங்களது பல்வேறு மாடல்களின் விலையை உயர்த்தியுள்ளன. இந்த விலை மாற்றம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் புதிதாக செல்போன் வாங்குபவர்கள் ஏற்கெனவே இருந்த விலையைவிட கூடுதல் தொகையைச் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கிடைத்துள்ள தகவல்களின்படி, சாம்சங் மற்றும் சியோமி ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து தங்களது 41 ஸ்மார்ட்போன் மாடல்களின் விலையை அதிகரித்துள்ளன. இதில் சாம்சங் நிறுவனத்தின் 22 மாடல்களும், சியோமி நிறுவனத்தின் 19 மாடல்களும் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு மாடலின் விலையைப் பொறுத்து குறைந்தபட்சம் ரூ.1,000 முதல் அதிகபட்சம் ரூ.4,000 வரை உயர்வு செய்யப்பட்டுள்ளது. சில மாடல்களில் இந்த விலை உயர்வு 18.75 சதவீதம் வரை இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போன்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மெமரி உதிரிபாகங்கள் மற்றும் இதர மூலப்பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதே இந்த முடிவுக்கு முக்கியக் காரணம் என்று நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. உற்பத்திச் செலவுகள் உயர்ந்துள்ளதால் அதன் தாக்கத்தைத் தவிர்க்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே ஒப்போ, விவோ, ரியல்மி உள்ளிட்ட பிற முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் தங்களது மாடல்களின் விலையை உயர்த்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இதனால் வரும் நாட்களில் ஸ்மார்ட்போன் சந்தையில் மேலும் விலை மாற்றங்கள் ஏற்படுமா என்ற கேள்வி வாடிக்கையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.




கருத்துகள் (0)