நாக்கின் நிறத்தில் இந்த மாற்றங்கள் இருக்கிறதா? உடலில் மறைந்திருக்கும் உடல்நலப் பிரச்சினைகளை உணர்த்தும் 4 முக்கிய அறிகுறிகள்!

நமது உடலில் ஏற்படும் பல்வேறு உடல்நல மாற்றங்களை சில நேரங்களில் நாக்கின் தோற்றம் மூலமாகவும் அறிந்துகொள்ள முடியும். நாக்கின் நிறம், அதன் மேற்பரப்பில் ஏற்படும் மாற்றங்கள், புண்கள் மற்றும் படலங்கள் போன்றவை சில உடல்நலப் பிரச்சினைகளுக்கான அறிகுறிகளாக இருக்கலாம். இதனால்தான் மருத்துவப் பரிசோதனையின்போது மருத்துவர்கள் நாக்கையும் கவனமாகப் பரிசோதிக்கின்றனர்.
குறிப்பாக நாக்கின் நிறம் வழக்கத்திற்கு மாறாக வெள்ளை, சிவப்பு, கருப்பு அல்லது வெளிர் நிறத்தில் காணப்பட்டால் அதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அப்படிப்பட்ட மாற்றங்கள் எதைக் குறிக்கலாம் என்பதைப் பார்க்கலாம்.
1. நாக்கில் வெள்ளைப் படலம் காணப்படுகிறதா?
நாக்கின் மேற்பரப்பில் வெள்ளை நிறத்தில் படலம் படிந்திருப்பது வாய்வழி சுகாதாரக் குறைபாடு, உடலில் நீர்ச்சத்து குறைதல் அல்லது பூஞ்சைத் தொற்று போன்ற காரணங்களால் ஏற்படலாம்.
குறிப்பாக வாயில் கேண்டிடா எனப்படும் ஈஸ்ட் பூஞ்சை அதிகமாக வளரும்போது Oral Thrush என்ற பாதிப்பு ஏற்பட்டு நாக்கில் வெள்ளைப் படலம் காணப்படலாம். நீரிழிவு நோயாளிகள், நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்கள் மற்றும் ஸ்டீராய்டு இன்ஹேலர் பயன்படுத்துபவர்களுக்கு இந்தப் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
2. நாக்கு சிவப்பு நிறமாக மாறினால் கவனிக்கவும்!
நாக்கு வழக்கத்தைவிட அதிக சிவப்பாகவோ அல்லது பளபளப்பாகவோ காணப்பட்டால், அது சில ஊட்டச்சத்துக் குறைபாடுகளைக் குறிக்கலாம்.
குறிப்பாக வைட்டமின் பி12 மற்றும் ஃபோலேட் குறைபாடு காரணமாக நாக்கு சிவந்து, மென்மையாக மாறக்கூடும். மேலும், ஸ்ட்ராபெர்ரி பழத்தைப் போன்ற சிவப்பு நிறத்துடன் நாக்கு காணப்படுவது சில நோய்த்தொற்றுகளிலும் ஏற்படலாம். கவாசாகி நோய் மற்றும் ஸ்கார்லெட் காய்ச்சல் போன்ற பாதிப்புகளிலும் இந்த அறிகுறி காணப்படலாம்.
3. நாக்கு கருப்பு நிறமாக மாறுவதற்கான காரணம் என்ன?
நாக்கில் கருப்பு நிறப் படலம் தோன்றினால் உடனே புற்றுநோய் அல்லது வேறு கடுமையான நோய் என்று முடிவு செய்துவிடக்கூடாது.
பொதுவாக வாயில் உள்ள இறந்த செல்கள் மற்றும் பாக்டீரியாக்கள் நாக்கின் மேற்பரப்பில் படிவதால் Black Hairy Tongue எனப்படும் பாதிப்பு ஏற்படலாம். புகைப்பிடித்தல், வாய்வழி சுகாதாரக் குறைபாடு, சில மருந்துகள் மற்றும் அதிகப்படியான காபி அல்லது தேநீர் பழக்கம் போன்றவையும் இதற்குக் காரணமாக இருக்கலாம்.
தொடர்ந்து கருப்பு நிற மாற்றம் காணப்பட்டாலோ, வலி அல்லது புண்கள் இருந்தாலோ மருத்துவரிடம் பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.
4. நாக்கு வெளிர் நிறமாகவோ, வழக்கத்திற்கு மாறாக மென்மையாகவோ இருந்தால்!
நாக்கு இயல்பான நிறத்தை இழந்து வெளிர்ந்து காணப்படுவது சில நேரங்களில் ரத்தசோகையின் அறிகுறியாக இருக்கலாம். குறிப்பாக இரும்புச்சத்துக் குறைபாடு காரணமாக நாக்கின் நிறத்திலும் அமைப்பிலும் மாற்றங்கள் ஏற்படலாம்.
அதேபோல், வைட்டமின் பி12 மற்றும் ஃபோலேட் குறைபாடுகளாலும் நாக்கு மென்மையாகவும் வழக்கத்திற்கு மாறாகவும் காணப்படலாம்.
இத்தகைய பிரச்சினைகள் இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் ரத்தப் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. இரும்புச்சத்து நிறைந்த கீரைகள், பருப்பு வகைகள் மற்றும் சத்தான உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?
நாக்கின் நிறத்தில் ஏற்படும் அனைத்து மாற்றங்களும் ஆபத்தான நோய்களைக் குறிக்காது. இருப்பினும், தொடர்ந்து வெள்ளைப் படலம் காணப்படுவது, ஆறாத புண்கள், வலி, வீக்கம், ரத்தக்கசிவு அல்லது விழுங்குவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் செய்யக்கூடாது.
குறிப்பாக நாக்கில் ஏற்படும் மாற்றங்கள் இரண்டு வாரங்களுக்கும் மேலாகத் தொடர்ந்தால் மருத்துவரிடம் பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.
நாக்கின் தோற்றம் மட்டும் வைத்து எந்தவொரு நோயையும் உறுதிப்படுத்த முடியாது. தேவையான மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகே சரியான காரணத்தைக் கண்டறிய முடியும். எனவே, நாக்கில் ஏற்படும் மாற்றங்களைக் கவனிப்பதுடன், உடல்நலத்தில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் உரிய மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.




கருத்துகள் (0)