பதிவுத்துறையைத் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கக் கூடாது! தமிழக அரசுக்கு FAIRA தலைவர் டாக்டர் ஹென்றி வலியுறுத்தல்!

நவீனமயமாக்கும் நடவடிக்கைகளில், அதன் முக்கியப் பணிகளைத் தனியார் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் ஒப்படைக்கக் கூடாது என்று அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் (FAIRA) நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஹென்றி தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதுடன், ஆவண எழுத்தர்கள் மற்றும் வழக்கறிஞர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்து, பொதுமக்களுக்குக் குறைந்த கட்டணத்தில் அரசின் நேரடிச் சேவைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஐந்து மாதிரி பதிவுமையங்களை அமைப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள ரூ.67.20 கோடி எவ்வாறு செலவிடப்படுகிறது என்பதை அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என டாக்டர் ஹென்றி கோரிக்கை விடுத்துள்ளார். கட்டிடங்கள், மென்பொருள், கணினி உபகரணங்கள், இணைய வசதிகள், பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு ஆகியவற்றுக்கான செலவினங்களைத் தனித்தனியாக வெளியிட வேண்டும் என்றும், இந்தத் திட்டத்தைத் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்துவதற்கான மொத்தச் செலவையும் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், அடுத்த ஐந்து மற்றும் பத்து ஆண்டுகளுக்கான பராமரிப்புச் செலவுகள், அரசுக்குச் சொந்தமான கட்டிடங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய சேமிப்பு ஆகியவற்றையும் கணக்கிட்டு வெளியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். பதிவுத்துறையை அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழ் நவீனமயமாக்குவதற்கான மாற்றுத் திட்டத்தையும் உருவாக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்!
மென்பொருள் உருவாக்கம், தரவுத்தள மேலாண்மை, இணையப் பாதுகாப்பு, டிஜிட்டல் ஆவணச் சரிபார்ப்பு உள்ளிட்ட தொழில்நுட்பப் பணிகளில் தமிழக இளைஞர்களைப் பணியமர்த்த வேண்டும் என்று டாக்டர் ஹென்றி தெரிவித்துள்ளார். இதற்காகப் பதிவுத்துறைக்கென நிரந்தரத் தொழில்நுட்பக் குழுவை உருவாக்கி, புதிதாக உருவாக்கக்கூடிய பணியிடங்கள் மற்றும் அதற்குத் தேவைப்படும் நிதி விவரங்களுடன் வேலைவாய்ப்புத் திட்டத்தை அரசு அறிவிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
தனியார் நிறுவனங்களின் தொழில்நுட்ப உதவியைப் பயன்படுத்துவதில் தவறில்லை என்றாலும், அரசின் முக்கியச் சேவைகள் முழுமையாகத் தனியார் நிறுவனங்களின் தொழில்நுட்பக் கட்டுப்பாட்டைச் சார்ந்திருக்கக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆவண எழுத்தர்கள், வழக்கறிஞர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும்!
பதிவுத்துறையை நம்பி ஆவண எழுத்தர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பலர் வாழ்வாதாரம் ஈட்டி வருவதாகச் சுட்டிக்காட்டியுள்ள டாக்டர் ஹென்றி, டிஜிட்டல் மயமாக்கலால் அவர்களின் தொழில் பாதிக்கப்படக் கூடாது என வலியுறுத்தியுள்ளார். புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கான பயிற்சிகளை அவர்களுக்கு வழங்குவதுடன், ஆவணங்கள் தயாரித்தல், சட்ட ஆலோசனை வழங்குதல், சொத்து ஆவணங்களைச் சரிபார்த்தல் போன்ற பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்வதற்கான வாய்ப்புகளையும் அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
குறைந்த கட்டணத்தில் அரசுச் சேவைகள் கிடைக்க வேண்டும்!
அரசு இ-சேவை மையங்கள் வாயிலாகப் பொதுமக்கள் குறைந்த கட்டணத்தில் பதிவுத்துறை சார்ந்த சேவைகளைப் பெறுவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்தல், ஆவண விவரங்களைப் பெறுதல், விண்ணப்பங்களின் நிலையை அறிதல், புகார்களைப் பதிவு செய்தல் போன்ற சேவைகளை எளிமைப்படுத்த வேண்டும் எனக் கோரியுள்ளார்.
ஒவ்வொரு சேவைக்கும் ரசீது வழங்கப்படுவதுடன், அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிடக் கூடுதலாகப் பணம் வசூலிப்பதைத் தடுக்கவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
டிஜிட்டல் ஆவணங்களுக்குப் பாதுகாப்பு அவசியம்!
நிலம், வீடு வாங்குவது என்பது பொதுமக்களின் வாழ்நாள் உழைப்புடன் தொடர்புடையது என்பதால், அவர்களின் சொத்து ஆவணங்கள் டிஜிட்டல் முறையில் பாதுகாக்கப்படும்போது அவை அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும் என்று டாக்டர் ஹென்றி தெரிவித்துள்ளார். ஆவணங்களில் முறைகேடாக மாற்றங்கள் செய்யப்படுவதையும், தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுவதையும் தடுக்கும் வகையில் வலுவான இணையப் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், பத்திரப்பதிவு அலுவலகங்களில் மின்சாரம், இணைய வசதி, குடிநீர், கழிவறை மற்றும் பொதுமக்கள் காத்திருப்பதற்கான இடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். பழைய கட்டிடங்களைச் சீரமைப்பதுடன், தேவையான இடங்களில் அரசுக்குச் சொந்தமான நிலத்தில் புதிய அலுவலகங்களையும் அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐந்து மாதிரி பதிவுமையங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள ரூ.67.20 கோடி குறித்த முழுமையான செலவுக் கணக்கையும், மாநிலம் முழுவதும் திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான நிதி விவரங்களையும் அரசு வெளியிட வேண்டும் என்றும் டாக்டர் ஹென்றி வலியுறுத்தியுள்ளார். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, ஆவண எழுத்தர்கள் மற்றும் வழக்கறிஞர்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பு, பொதுமக்களுக்குக் குறைந்த கட்டணத்தில் அரசின் நேரடிச் சேவை, சொத்து ஆவணங்களுக்குப் பாதுகாப்பு ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய விரிவான திட்டத்தைத் தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்பதே FAIRA-வின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது.




கருத்துகள் (0)