திருமழிசை மின்மயானத்தில் மின்தடை என வெளியான செய்தி தவறு: அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

திருமழிசையில் உள்ள மின்மயானத்தில் மின்சாரம் இல்லாததால், இறந்தவரின் உடலுடன் உறவினர்கள் காத்திருப்பதாகச் செய்தி சேனல் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. இதற்கு விளக்கம் அளித்துள்ள அமைச்சர் நிர்மல்குமார், மின்விநியோகத்தில் எந்தத் தடையும் ஏற்படவில்லை என்றும், மயானத்தின் உட்புற மின்சாரக் கட்டமைப்பில் ஏற்பட்ட பழுதே காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில், சம்பந்தப்பட்ட அதிகாரி பேசும் காணொளியுடன் பதிவிட்டுள்ள அமைச்சர், மின்வாரியத்தின் மின்விநியோகத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார். மயானத்தின் உட்புற மின்சாரக் கட்டமைப்பு ஊராட்சியின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அங்குள்ள கேபிளில் ஏற்பட்ட பழுது காரணமாக மின்மயானத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டதாகவும் விளக்கமளித்துள்ளார்.
மேலும், உட்புற மின்பழுதைச் சரிசெய்வதில் ஊராட்சி ஊழியரால் தாமதம் ஏற்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், ஊராட்சியின் கோரிக்கையை ஏற்று மின்வாரியக் குழுவினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்குச் சென்றதாகத் தெரிவித்துள்ளார். அங்கு ஜெனரேட்டர் ஏற்பாடு செய்து, இறுதிச் சடங்கு தாமதமின்றி நடைபெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
தற்போது மயானத்தின் உட்புற மின்சாரக் கட்டமைப்பில் ஏற்பட்ட பழுதைக் கண்டறிந்து சரிசெய்வதற்குத் தேவையான உதவிகளையும் மின்வாரியக் குழுவினர் தொடர்ந்து செய்து வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.




கருத்துகள் (0)