செவ்வாய், அக்டோபர் 27, 2026
உண்மையின் குரல்
இந்தியா

ரயில் டிக்கெட் எடுக்கும்போது இனி இதை கவனிங்க.. ரயில்வே வாரியம் புதிய விதி..

ரயில் டிக்கெட் எடுக்கும்போது இனி இதை கவனிங்க.. ரயில்வே வாரியம் புதிய விதி..

 

 

ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்களில் பயணச்சீட்டு பெறும் பயணிகள், விருப்பப்பட்டால் பயணக் காப்பீட்டையும் சேர்த்து பெற்றுக்கொள்ளும் வசதி தற்போது உள்ளது. இணையதளம் அல்லது செயலி மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகள், டிக்கெட் கட்டணத்தை டிஜிட்டல் முறையில் செலுத்தி வருகின்றனர்.

 

ஆனால், ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு கவுன்டர்களில் பயணக் காப்பீட்டுக்கான பிரீமியத் தொகையான 45 பைசாவை ரொக்கமாக வசூலிப்பதில் சில்லறைப் பற்றாக்குறை பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சிறிய அளவிலான பைசா நாணயங்கள் தற்போது நடைமுறையில் போதுமான அளவில் புழக்கத்தில் இல்லாததால், பயணிகளிடம் சரியான தொகையை வசூலிப்பதிலும், மீதமுள்ள சில்லறையை திருப்பி வழங்குவதிலும் ஊழியர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

 

இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில், ரயில் நிலைய முன்பதிவு கவுன்டர்களில் டிக்கெட் பெறும்போது பயணக் காப்பீட்டைத் தேர்வு செய்யும் பயணிகள், டிக்கெட் கட்டணம் மற்றும் காப்பீட்டு பிரீமியம் உள்ளிட்ட மொத்தத் தொகையையும் டிஜிட்டல் முறையிலேயே செலுத்த வேண்டும் என்ற புதிய விதியை ரயில்வே வாரியம் அமல்படுத்தியுள்ளது.

 

இதனால், பயணக் காப்பீட்டை தேர்வு செய்யும் பயணிகள் இனி முன்பதிவு கவுன்டர்களில் மொத்த கட்டணத்தையும் ரொக்கமாக செலுத்த முடியாது. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மூலம் முழுத் தொகையையும் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

 

 

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.