ரூ.35.79 கோடி சொத்து குவிப்பு வழக்கு.. அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!

வருமானத்திற்கு அதிகமாக சொத்துகள் சேர்த்ததாகவும், சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும் எழுந்துள்ள புகார்கள் தொடர்பான வழக்கில், முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் இன்று (நவம்பர் 18) சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக நேரில் ஆஜரானார். ரூ.35.79 கோடி மதிப்பிலான சொத்துகள் தொடர்பான இந்த வழக்கு தற்போது மீண்டும் விசாரணைக் கட்டத்தை எட்டியுள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு விஜயபாஸ்கர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்திருந்தது. இந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்துகள் மற்றும் அவற்றின் மதிப்பு தொடர்பான விவரங்களின் அடிப்படையில் அமலாக்கத்துறையும் தனியாக விசாரணையை மேற்கொண்டு வருகிறது.
லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு, சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பான அம்சங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ஏற்கனவே விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
இந்நிலையில், மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து அவர் இன்று சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார். அங்கு அவரிடம் வழக்கு தொடர்பான பல்வேறு விவரங்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ரூ.35.79 கோடி சொத்து குவிப்பு புகார் தொடர்பாக நடைபெற்று வரும் இந்த விசாரணை அரசியல் வட்டாரத்திலும் கவனம் பெற்றுள்ளது.




கருத்துகள் (0)