வியாழன், நவம்பர் 19, 2026
உண்மையின் குரல்
ஆன்மிகம்

தமிழகத்தில் 6,931 கோயில்களின் தணிக்கை அறிக்கை இணையத்தில் பதிவேற்றம்.. உயர்நீதிமன்றத்தில் அறநிலையத்துறை தகவல்!

தமிழகத்தில் 6,931 கோயில்களின் தணிக்கை அறிக்கை இணையத்தில் பதிவேற்றம்.. உயர்நீதிமன்றத்தில் அறநிலையத்துறை தகவல்!

தமிழகத்தில் உள்ள கோயில்களின் வரவு, செலவு மற்றும் நிதி நிர்வாகம் தொடர்பான தணிக்கை அறிக்கைகளை இணையதளத்தில் வெளியிடுவது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநிலம் முழுவதும் 6,931 கோயில்களின் தணிக்கை அறிக்கை விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

 

கோயில்களின் நிர்வாகம் மற்றும் நிதி சார்ந்த விவரங்கள் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் வெளிப்படையாக வெளியிடப்பட வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் இந்த விவகாரம் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள தணிக்கை அறிக்கைகளில் பல முக்கியமான தகவல்கள் இடம்பெறவில்லை என மனுதாரர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

 

இதற்கு பதிலளித்த இந்து சமய அறநிலையத்துறை தரப்பு, ஏற்கனவே 6,931 கோயில்களின் தணிக்கை அறிக்கை விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள பதிவேற்றப் பணிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தது. மேலும், எஞ்சியுள்ள பதிவேற்றப் பணிகள் அனைத்தும் இன்னும் இரண்டு மாதங்களுக்குள் நிறைவு செய்யப்படும் என நீதிமன்றத்தில் உறுதியளிக்கப்பட்டது.

 

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை டிசம்பர் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. அறநிலையத்துறையின் இணையதளத்தில் தணிக்கை அறிக்கைகள் முழுமையாகப் பதிவேற்றம் செய்யப்படுவது தொடர்பான விவகாரம் தொடர்ந்து நீதிமன்றத்தின் கண்காணிப்பில் இருந்து வருகிறது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.