ஞாயிறு, நவம்பர் 22, 2026
உண்மையின் குரல்
ஆன்மிகம்

திருச்செந்தூர் கோயில் நிகழ்ச்சிகளில் தனிநபர் புகழ் முழக்கங்களுக்கு தடை!

திருச்செந்தூர் கோயில் நிகழ்ச்சிகளில் தனிநபர் புகழ் முழக்கங்களுக்கு தடை!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சியின்போது எழுப்பப்பட்ட சர்ச்சைக்குரிய முழக்கங்கள் தொடர்பாக கோயில் நிர்வாகம் புதிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. இனிவரும் ஆன்மிக நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் கலைஞர்கள், ஆன்மிகத்துக்கு தொடர்பில்லாத கோஷங்கள் மற்றும் தனிநபர்களைப் புகழ்ந்து பாடும் பாடல்களைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரத்தின்போது கோயில் நிர்வாகம் சார்பில் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற சில பாடகர்கள், பக்திப் பாடல்களுக்கு இடையே ஆன்மிகத்துடன் தொடர்பில்லாத முழக்கங்களை எழுப்பியதாகக் கூறப்படுகிறது. இதனால் பக்தர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டதுடன், பொதுவெளியிலும் இச்சம்பவம் விமர்சனங்களுக்கு உள்ளானது.

 

இந்த விவகாரம் கோயிலின் பெயருக்கும் நற்பெயருக்கும் பாதிப்பை ஏற்படுத்தியதாகக் கருத்துகள் எழுந்த நிலையில், இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில் நிர்வாகம் இந்த அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.

 

இதன்படி, இனி கோயில் சார்பில் நடத்தப்படும் ஆன்மிக நிகழ்ச்சிகள் மற்றும் பக்தி இன்னிசை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் கலைஞர்கள் இறைவனைப் போற்றும் வசனங்கள், பக்திப் பாடல்கள் ஆகியவற்றை மட்டுமே நிகழ்த்த வேண்டும். ஆன்மிகத்துக்கு தொடர்பில்லாத கோஷங்கள் மற்றும் தனிநபர் புகழ்பாடல்களுக்கு அனுமதி இல்லை என கோயில் நிர்வாகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.