தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணைக்கு அனுமதி வழங்கக்கூடாது – பிரதமருக்கு மாணிக்கம் தாகூர் கடிதம்!

மேகதாது அணைத் திட்டம் தொடர்பாக தமிழக அரசின் ஒப்புதல் பெறாமல் எந்தவிதமான அனுமதியையும் வழங்கக் கூடாது என வலியுறுத்தி, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் இந்த விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.
காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக கர்நாடக அரசு தொடர்ந்து விதிமுறைகளை மீறி செயல்பட்டு வருவதாகவும் மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார். குறிப்பாக, கடந்த ஐந்து மாதங்களில் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகிய அமைப்புகள் பிறப்பித்த குறைந்தது ஆறு உத்தரவுகளை கர்நாடக அரசு பின்பற்றவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
காவிரி நீர் பங்கீட்டில் ஏற்படும் இத்தகைய பிரச்சினைகளால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பாதிப்புக்குள்ளாவதாகவும் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார். எனவே, மேகதாது அணைத் திட்டத்திற்கு தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் மத்திய அரசு எந்த அனுமதியும் வழங்கக் கூடாது என்பதை பிரதமரிடம் அவர் வலியுறுத்தியுள்ளார்.




கருத்துகள் (0)