திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் 100 அடி தூரத்திற்கு உள்வாங்கிய கடல்; ஆபத்தை உணராமல் புகைப்படம் எடுக்கும் பக்தர்கள்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ள நிலையில், கோயில் கடற்கரையில் கடல் திடீரென சுமார் 100 அடி தூரத்திற்கு உள்வாங்கியுள்ளது. இதனால் கடற்கரைப் பகுதியில் வழக்கமாக கடல் நீர் சூழ்ந்திருக்கும் இடங்கள் தற்போது வெளியே தெரிகின்றன.
கடல் உள்வாங்கியதைத் தொடர்ந்து, நீண்ட தூரத்திற்கு பாசி படர்ந்த பாறைகள் தென்படுகின்றன. மேலும், அந்தப் பாறைகளுக்கு இடையே சில பழமையான சிலைகளும் வெளியே தெரிகின்றன. இதனைப் பார்த்த பக்தர்கள் ஆர்வத்துடன் கடற்கரைப் பகுதியில் இறங்கி புகைப்படங்களும் எடுத்து வருகின்றனர்.
திருவிழாவை முன்னிட்டு ஏராளமான மக்கள் கடற்கரையில் கூடியுள்ள நிலையில், கடல் உள்வாங்கிய பகுதியின் ஆபத்தை உணராமல் பலர் அங்கு செல்வது கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடல் நீர் திடீரென மீண்டும் உள்ளே வரக்கூடிய அபாயம் இருப்பதால், பக்தர்கள் கடற்கரைப் பகுதியில் இறங்குவதைத் தவிர்த்து பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியமாகியுள்ளது.




கருத்துகள் (0)